தமிழ் - சிங்கள சித்திரைப் புத்தாண்டினை முன்னிட்டு, மட்டக்களப்பு மாநகர சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட மிகப் பிரம்மாண்டமான பட்டத் திருவிழா மற்றும் கலாசார நிகழ்வுகள் (26.04.2026) ஞாயிற்றுக்கிழமை கல்லடி கடற்கரையில் மிக விமரிசையாக நடைபெற்றது.
மாநகர முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வினை பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார்.
வண்ணமயமான வானமும் பட்டப் போட்டியும் பிற்பகல் 3:30 மணியளவில் ஆரம்பமான இந்த விழாவில், பல்வேறு வடிவங்கள் மற்றும் வர்ணங்களைக் கொண்ட நூற்றுக்கணக்கான பட்டங்கள் வானில் பறக்கவிடப்பட்டன.
இதில் தனிநபர்கள் மற்றும் குழுக்கள் எனப் பலதரப்பினரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
மாலை 5:30 மணியளவில் மட்டக்களப்பு மண்ணின் கலைஞர்கள் பங்கேற்ற கலை, பாரம்பரிய இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது. இதனை பார்வையிடுவதற்காக ஆயிரக்கணக்கான பொது மக்கள் பங்கேற்றிருந்தனர்.
மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் என்.தனஞ்செயன், மாநகர சபை பிரதி முதல்வர், பிரதேச சபை தவிசாளர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கலாசார பண்பாட்டுத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் மாவட்ட பொலிஸ் நிலைய உயரதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில்
மட்டக்களப்பு வரலாற்றில் ஒரு மறக்க முடியாத சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டமாக அமைந்த இந்த பட்டத் திருவிழாவில், முன்னெப்போதும் இல்லாத வகையில் மிக அதிகளவிலான பொதுமக்கள் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.