இலங்கை வரலாற்றில் அதிகூடிய மூலதனச் செலவைக் கொண்ட ஆண்டாக 2027 ஆம் ஆண்டு மாறும்!

வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படும் நிதியை அந்தந்த நிதியாண்டுக்குள்ளேயே செலவிட்டு, விரைவாக மக்களுக்குப் பலன்களைப் பெற்றுக்கொடுக்க அர்ப்பணிப்புடன் செயல்படுவது அரச அதிகாரிகளின் பொறுப்பாகும் என்று அம்பாறை பலநோக்கு  நகர மண்டபத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோது ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை வரலாற்றில் அதிகூடிய மூலதனச் செலவைக் கொண்ட ஆண்டாக 2027 ஆம் ஆண்டை மாற்றி, மூலதனச் செலவாக 2,000 பில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

1,744.85 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்படும் அம்பாறை பலநோக்கு நகர மண்டபத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் இன்று (22.05.2026) முற்பகல் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

அம்பாறை நகர சபைக்கு சேவைகளைப் பெற்றுக்கொள்ள வரும் மக்களின் வசதிகளை மேம்படுத்துவதுடன், வர்த்தக சமூகம் ஒரு சட்டப்பூர்வமான மற்றும் முறையான இடத்தில் தமது வியாபாரங்களை அபிவிருத்தி செய்து கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதும், அம்பாறை மாவட்ட மக்களின் கலாசார வாழ்க்கையை மேம்படுத்துவதுமே இதன் நோக்கங்களாகும். 70 ஆண்டுகளுக்கும் மேலாக நிறைவேற்றப்படாமல் இருந்த மக்களின் தேவையை நிவர்த்தி செய்யும் வகையில், நவீன வசதிகளுடன் இந்த பலநோக்கு கட்டிடம் நிர்மாணிக்கப்படவுள்ளது.

நவீன தொழில்நுட்பத்துடனான அரங்கு, வர்த்தக வளாகம், அலுவலக வளாகம் மற்றும் பாரிய அளவிலான வாகன நிறுத்துமிடம் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த பலநோக்கு கட்டிட வளாகத்தின் நிர்மாணப் பணிகள், 2028.12.31 ஆம் திகதிக்குள் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

பல வருடங்களாக அம்பாறை நகர சபையின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் அங்கு தொழிலாளராகப் பணியாற்றிவரும் ஈ. டி. ஹேமச்சந்திரவும் இந்நிகழ்வில் ஒரு அதிதியாகக் கலந்துகொண்டமை சிறப்பம்சமாகும்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அம்பாறை மாவட்டத்தின் வீதிகள், பாலங்கள், கால்வாய்கள் மற்றும் கட்டிடங்களை நிர்மாணிப்பதற்காக 2026ஆம் ஆண்டிற்கு 22,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டினார். அத்துடன், இந்த நிதி ஒதுக்கீடுகளை 2026 நிதி ஆண்டிற்குள்ளேயே முறையாகப் பயன்படுத்தி, மக்களுக்கு விரைவாகப் பலன்களை வழங்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயல்படுவது அரச அதிகாரிகளின் பொறுப்பாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க,

அரசாங்கம் என்ற ரீதியில் நாம் எதிர்நோக்கியுள்ள சவாலானது, நாம் ஒதுக்கும் நிதியை அந்தந்த நிதியாண்டிற்குள் செலவழித்து முடிப்பதாகும். இந்த அம்பாறை மாவட்டத்தில் வீதிகள், பாலங்கள், கால்வாய்கள் மற்றும் கட்டிடங்களை நிர்மாணிப்பதற்காக 2026 ஆம் ஆண்டிற்காக 22,000 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியை முகாமைத்துவம் செய்து, முறையான திட்டங்களை வகுத்து, பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பு அரச அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டிற்குத் திட்டமிடப்பட்ட பணிகளை இந்த ஆண்டிற்குள்ளேயே செய்து முடிக்க முடியாமல் போனால், அது அடுத்த ஆண்டிற்குச் செல்லும். அப்போது அந்த ஆண்டின் பணிகள் மேலும் தள்ளிப்போகும்.

எனவே, நாம் எதிர்நோக்கும் பிரதான சவாலானது, இவ்வாறு ஒதுக்கப்படும் நிதியை அந்தந்த நிதியாண்டிற்குள் முறையாகச் செலவிடாததால் ஏற்படும் பிரச்சினையாகும். நான் அண்மையில் சில முக்கிய திட்டங்களின் அறிக்கை ஒன்றை கோரியிருந்தேன். அந்த அறிக்கையின்படி, திட்டங்களுக்காக மதிப்பிடப்பட்டிருந்த தொகை 300 பில்லியன் ரூபாவாகும். தாமதம் ஏற்பட்டு, அதனை உரிய காலத்திற்குள் நிறைவு செய்ய முடியாமல் போனதன் காரணமாக 600 பில்லியன் ரூபா செலவை ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மதிப்பிடப்பட்ட 300 பில்லியன் ரூபா பெறுமதியான பணிகளைச் செய்வதற்கு, இந்தத் தாமதத்தின் காரணமாக 600 பில்லியன் ரூபா செலவாகியுள்ளது. அதாவது, அதுபோன்ற பல பணிகளைச் செய்யக்கூடிய அளவிலான தொகையாகும்.

எனவே, இவ்வாறு ஒதுக்கப்படும் நிதியை முறையாகச் செலவிடுவது நமது எதிர்பார்ப்பாகும். அடுத்த வருடத்தை இலங்கையில் அதிகூடிய மூலதனச் செலவினங்களைக் கொண்ட வருடமாக நாம் மாற்றுவோம். அடுத்த வருட மூலதனச் செலவினங்களுக்காக 2000 பில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

மிகவும் சிறந்த நிதி முகாமைத்துவத்தைப் பேண முடிந்ததன் காரணமாக, திறைசேரியிடம் வலுவானதொரு கணக்கு உள்ளது. 2022, 2023 காலப்பகுதியில் திறைசேரியின் வங்கி மேலதிகப் பற்று 800 பில்லியன் ரூபாவாக இருந்தது. திறைசேரி கடனிலேயே செயற்பட்டது. ஆனால், எம்மால் நேர்மறை வைப்புத்தொகையுடன் திறைசேரியைக் கொண்டுசெல்ல முடிந்துள்ளது. இதன் காரணமாக, கிராமப்புற மக்களின் அத்தியாவசியப் பணிகளுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை வழங்க எம்மால் முடிந்துள்ளது.

நாங்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர், சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தனித்தனியாகச் சந்தித்து, செய்யப்பட வேண்டிய பணிகள் என்னவென்று கேட்டறிந்தோம். அந்தப் பணிகளுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்க முடியும். எனினும், அந்தப் பணத்தை முறையாகச் செலவிடும் பொறுப்பு உங்களிடமே உள்ளது.

மகா சங்கத்தினர் உட்பட மதத் தலைவர்கள், கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர, கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ, பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள ரத்நாயக்க உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள், அம்பாறை நகரபிதா இந்திக விஜேவிக்ரம, மாகாண பிரதம செயலாளர் M.W.G. திஸாநாயக்க உட்பட பிரதேச மக்கள் பிரதிநிதிகள், அம்பாறை மாவட்டச் செயலாளர் அனூபம மங்கள விக்ரமாரச்சி உள்ளிட்ட அரச அதிகாரிகள், பிரதேச வாசிகள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
புதியது பழையவை