கிழக்கு மாகாண பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு நேரடித் தீர்வு காணும் நோக்கில், கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர தலைமையில் ‘மக்கள் தினம்’ அம்பாறை ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.
பிரச்சினைகள் தொடர்பாக ஏற்கனவே ஆளுநருக்கு கடிதங்கள் மூலம் அறிவித்தும், இதுவரை உரிய தீர்வு கிடைக்கப்பெறாத தனிநபர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும்
இதில் கலந்துகொண்டு தமது கவலைகளை ஆளுநரிடம் தெரிவித்தனர்.
மக்களின் கோரிக்கைகளை செவிமடுத்த ஆளுநர், அவற்றிற்கான சாத்தியமான தீர்வுகளை வழங்குமாறு அங்கிருந்த அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
குறித்த பிரச்சினைகளுடன் தொடர்புடைய திணைக்களங்களின் தலைவர்கள், நிறுவனங்களின் பொறுப்பதிகாரிகள் மற்றும் உயர்மட்ட அரசாங்க அதிகாரிகள் எனப் பலரும் பங்கேற்றிருந்தனர்.
மக்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்து, அரச சேவைகளை வினைத்திறனுடன் முன்னெடுக்கும் ஒரு முயற்சியாக இந்த மக்கள் தினம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.