உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு,நேற்று(06.05.2026) கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் திருப்பழுகாமம் மயாண பூமியில் பாரிய சிரமதானப் பணியொன்று வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.
இந்தப் பணியானது போரதீவுப்பற்று பிரதேச சபையின் பழுகாமம் வட்டார உறுப்பினர் சு.
விக்னேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இதில் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் மகளிர் அமைப்பாளர் சுமதி, அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு மயாணப் பகுதியைத் துப்பரவு செய்தனர்.
நிகழ்வின் போது உரையாற்றிய உறுப்பினர் சு.விக்னேஸ்வரன், மக்களின் ஆதரவு குறித்து நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
"கடந்த தேர்தலில் மக்கள் எங்கள் மீது வைத்த நம்பிக்கை இன்றும் குறையவில்லை என்பதை இந்த மக்கள் பங்களிப்பு நிரூபிக்கிறது.
இது வெறும் துப்பரவுப் பணி மட்டுமல்ல, மக்கள் சேவையில் நாங்கள் என்றும் பின்வாங்க மாட்டோம் என்பதற்கான அடையாளம்."
தொடர்ந்து பேசிய அவர், சிரமதானத்தில் ஈடுபட்ட பொதுமக்களுக்குத் தேவையான சிற்றுண்டிகள் மற்றும் உதவிகளை வழங்கிய ஆதரவாளர்களுக்கும், ஒத்துழைப்பு வழங்கிய கிராம மக்களுக்கும் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.
இந்தச் சிரமதானப் பணியானது, அரசியல் கடந்த மக்கள் சேவையாக அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.