வங்காள விரிகுடாவின் தென்மேற்கு பகுதியில் நிலவும் காற்றுச் சுழற்சியானது நாளை காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு கரையோரங்களை ஒட்டி நகரவுள்ளது.
இதன் காரணமாக எதிர்வரும் மே 13ஆம் திகதி வரை நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிதீவிர மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
இன்று (10.05.2026)ஆம் திகதி பிற்பகல் வேளையில் முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, கண்டி, காலி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
மாலை 5.30 மணிக்குப் பின்னர் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் மழை செறிவடையும்.
நாளை (11.05.2026)ஆம் திகதி மன்னார், அனுராதபுரம், தம்புள்ளை, நுவரெலியா மற்றும் மொனராகலை உள்ளிட்ட மாவட்டங்களில் பிற்பகல் வேளையில் கடும் மழை எதிர்பார்க்கப்படுகிறது.
(12.05.2026)கிழக்கு மாகாணம் மற்றும் பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு கனமழை நீடிக்கும்.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அபாயம்.
ஏற்கனவே பெய்த மழை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் குளங்கள் மற்றும் ஆறுகள் வான் பாயத் தொடங்கியுள்ளன.
இதனால் தாழ்நிலப் பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுகிறது.
அதேவேளை, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் நிலம் அதிக நீர்க்கொள்ளளவை எட்டியுள்ளதால், மலைப்பாங்கான பகுதிகளில் வசிப்போர் நிலச்சரிவு குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கடற்றொழிலாளர்களுக்கு விசேட அறிவுறுத்தல்.
நாளை மறுதினம் முதல் இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு கடற்பகுதிகள் கடும் கொந்தளிப்புடன் காணப்படும். எனவே, மீனவர்கள் மற்றும் கடலில் ஈடுபடுவோர் மறு அறிவித்தல் வரும் வரை மீன்பிடி நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மாறிவரும் காலநிலை
வழமையாக மே மாதத்தில் மழை குறைவாகக் காணப்படும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், கடந்த ஆண்டைப் போன்றே இவ்வாண்டும் வரலாறு காணாத மழை வீழ்ச்சி பதிவாக வாய்ப்புள்ளது.
இது காலநிலை மாற்றத்தின் தீவிரத்தையே காட்டுவதாக ஆய்வாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.