மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில், ஆரையம்பதி ஒல்லிக்குளம் பகுதியில் இன்று (10.05.2026)மாலை பயணித்துக் கொண்டிருந்த வேன் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்து முற்றாகச் சேதமடைந்துள்ளது.
வெளிநாட்டிலிருந்து இலங்கை வருகை தந்த ஒரு குழுவினர், கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி குறித்த வேனில் பயணித்துள்ளனர்.
இன்று (10.05.2026)மாலை ஆரையம்பதி ஒல்லிக்குளம் பகுதியை வேன் கடக்க முற்பட்ட போது, எதிர்பாராத விதமாக வாகனத்தில் தீ பரவியுள்ளது.
சிறிது நேரத்திலேயே தீ வேன் முழுவதும் பரவி, வாகனம் திகுதிகுவென எரியத் தொடங்கியுள்ளது.
இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வேன் தீப்பற்றியதை அவதானித்த பயணிகள் உடனடியாக வாகனத்திலிருந்து வெளியேறியுள்ளனர்.
இதனால் வேனில் பயணித்த அனைவரும் எவ்வித காயங்களுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தீப்பரவலுக்கான துல்லியமான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இயந்திரக் கோளாறு காரணமாக இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.