மத்திய வங்காள விரிகுடா பகுதியில், இலங்கையின் பருத்தித்துறைக்கு வடகிழக்கே 309 கி.மீ தூரத்திலும், இந்தியாவின் கடலூருக்கு கிழக்கே 219 கி.மீ தூரத்திலும் ஒரு நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு நிலை (Well Marked Low Pressure) நிலைகொண்டுள்ளது.
அமுக்க சாய்வு விசை (PGF) குறைவாக இருப்பதால், இது கடந்த சில மணித்தியாலங்களாக ஒரே இடத்தில் நிலைகொண்டு, தற்போது மிகவும் மெதுவான வேகத்தில் நகர்ந்து வருகின்றது.
இருப்பினும், இதன் சுழற்சி வேகம் அதிகமாக உள்ளதால், அரபிக் கடலிலிருந்து இலங்கையூடாக அதிக ஈரப்பதனை இது ஈர்த்து வருகின்றது.
இதன் காரணமாக நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
எதிர்பார்க்கப்படும் மழைப்பொழிவு விபரம்.
இன்று(மே 16, சனிக்கிழமை)
நாளை நாடு முழுவதும் பரவலாக கனமழை பெய்யும். குறிப்பாக பின்வரும் மாகாணங்களில் மழையின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
வடக்கு, கிழக்கு மற்றும் மேல் மாகாணங்கள்.
வடமேற்கு, மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்கள்.
நாளை (மே 17, ஞாயிற்றுக்கிழமை)
கனமழை மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்கள்.
மிதமான மழை வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள்.
ஏற்கனவே தொடர்ச்சியாக மழை பெய்து வரும் பகுதிகளில், அடுத்த இரு நாட்களும் மழை நீடிக்கும் என்பதால் தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் வெள்ளம் குறித்து விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மத்திய, ஊவா மற்றும் வடமேற்கு மாகாணங்களின் மலைப்பாங்கான பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால், அங்குள்ள மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
எதிர்வரும் மே 18-ம் திகதி காலை வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சூழவுள்ள கடல் பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும். எனவே, மீனவர்கள் அதுவரை கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வானிலை மாற்றங்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மேலதிக அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவது பாதுகாப்பானது.