மட்டக்களப்பு வாழைச்சேனை துறைமுகம் தொடர்பாக நாங்கள் மேற்கொண்ட ஆய்வுகளில், இதன் மூலம் வாழைச்சேனை பிரதேச சபைக்கு எவ்வித கட்டணமும் செலுத்தப்படவில்லை என்பது தெரியவந்ததாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.
இந்தத் துறைமுகத்தின் பராமரிப்பு, குப்பை அகற்றுதல் மற்றும் கழிவு மேலாண்மை உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளையும் வாழைச்சேனை பிரதேச சபையே மேற்கொண்டு வந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எங்களது தவிசாளர் மேற்கொண்ட முயற்சிகளின் மூலம், இப்பணியில் ஒரு முக்கியமான ஆரம்ப வெற்றியை நாம் பெற்றுள்ளோம் என்று கூறலாம். தற்போது, வாழைச்சேனை துறைமுகம் வழியாக வாழைச்சேனை பிரதேச சபைக்கு வருமானம் கிடைக்கத் தொடங்கியுள்ளது.
மேலும், இந்தத் துறைமுகத்தில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களுக்கு தேவையான கூடுதல் வசதிகளை ஏற்படுத்துவதும், பிரதேச சபை வழியாக வழங்கப்படும் சேவைகளை மேலும் விரிவுபடுத்துவதும் குறித்து நேரடி கள ஆய்வு ஒன்றையும் நாங்கள் மேற்கொண்டுள்ளோம்.
இந்த முயற்சியை வெற்றிகரமாக முன்னெடுத்த தவிசாளர் சுதாகருக்கு, இலங்கை தமிழரசு கட்சி சார்பில் எனது மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல், இவ்விடயத்தில் வழிகாட்டியாக இருந்த முன்னாள் மாநகர முதல்வர் தி.சரவணபவனுக்கும் எனது பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.