மட்டக்களப்பு மாவட்டம், போரதீவுப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட அம்மன்குளம், விவேகானந்தபுரம் இளஞ்சுடர் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில், "சித்திரைப் புத்தாண்டு கிராமிய கலாசார விளையாட்டு விழாவானது நேற்று (09.05.2026)ஆம் திகதி சனிக்கிழமை மாலை மிக விமரிசையாக நடைபெற்றது.
இளஞ்சுடர் விளையாட்டு மைதானத்தில் கழகத்தின் தலைவர் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவிற்கு, போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் விமலநாதன் மதிமேனன் அவர்கள் தலைமை அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக
வரதராஜன் (வெல்லாவெளி வட்டார உறுப்பினர், போரதீவுப்பற்று பிரதேச சபை),க.கேசவப்போடி
மண்முனை தென்மேற்கு (பட்டிப்பளை) பிரதேச சபை உறுப்பினர்,
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் வெல்லாவெளி வட்டார அமைப்பாளர் பிரதிக்குமார்,
ஆகியோர் பங்கேற்றனர்.
இவர்களுடன் மதகுருமார்கள், கிராம உத்தியோகஸ்தர், கிராம அபிவிருத்தி உத்தியோகஸ்தர், ஆசிரியர்கள், விளையாட்டு நடுவர்கள் மற்றும் இளஞ்சுடர் விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் எனப் பல முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.
மறைந்து வரும் எமது பாரம்பரிய கிராமிய விளையாட்டுக்களை ஊக்குவிக்கும் வகையில் அமைந்த இவ்விழாவில், வழுக்கு மரம் ஏறுதல், கயிறு இழுத்தல், முட்டி உடைத்தல், சாக்கு ஓட்டம் ,மிட்டாய் ஓட்டம்,உள்ளிட்ட பல்வேறு சுவாரஸ்யமான போட்டிகள் நடத்தப்பட்டன.
பிரதேசத்தின் கலாசார விழுமியங்களைப் பாதுகாக்கவும், இளைஞர்களிடையே ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் வளர்க்கவும் இளஞ்சுடர் விளையாட்டுக் கழகத்தினர் இந்தச் சிறப்பான ஏற்பாட்டினைச் செய்திருந்தனர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு அதிதிகளால் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இவ்விழாவினைப் பார்ப்பதற்குப் பிரதேசத்தின் பல பாகங்களிலிருந்தும் திரளான பொதுமக்கள் வருகை தந்து, வீரர்களை உற்சாகப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.