இலங்கை தமிழரசுக் கட்சியின் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் நிதி மோசடியில் ஈடுபட்டதாக தெரிவித்து, அதே கட்சியில் உறுப்பினராக இருக்கும் தெய்வேந்திரம் இந்திரதாஸ், இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவருக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.
மேற்படி தெய்வேந்திரம் இந்திரதாஸ் ஆகிய நான் தெரியப்படுத்துவது யாதெனில், 2018ம் ஆண்டு முதல் எனது சொந்த நிதியினால் VP அறக்கட்டளை எனும் நிர்வாகத்தை ஸ்தாபித்து தற்சமயம் வரை செயற்பட்டு வருகின்றமை யாவரும் அறிந்தது.
இந்த அறக்கட்டளையில் 2019ம் ஆண்டு பணியமர்த்தப்பட்ட வேலாயுதம் கரிகாலன் என்பவர் 2025ம் ஆண்டு அவராகவே பணியிலிருந்து விலகினார்.
பணியிலிருந்த காலத்திலும் அதன் பிற்பாடும் எனது அறக்கட்டளை மற்றும் shinedas pvt ltd கம்பெனிக்கு சொந்தமான நிதி மற்றும் சொத்துக்கள் சம்பந்தமாக இவர் கையாடல் செய்துள்ளார்.
அத்துடன், VP அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட பத்து இலட்சம் ரூபாவினை தனது தேவைகளிற்காக பயன்படுத்தியுள்ளார் என்பதும் இவர் தவிசாளராக பதவியேற்ற பின்பு VP அறக்கட்டளையானது அவருடையது எனவும் அதற்கு தலைவராக அவரும் செயலாளராக தனது மனைவியும் செயற்படுவதாகவும் கூறியுள்ளார்.
7 நாட்கள் கால அவகாசம்
இதற்கான ஆதாரங்கள் மற்றும் சான்றுகள் என்னிடம் உள்ளன.இது சம்பந்தமாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் காணொளிகள் மூலம் பதிவுகள் செய்துள்ளேன். தங்களது தமிழரசுக்கட்சியில் நானும் ஒரு ஆயட்கால உறுப்பினராக உள்ளேன். எமது கட்சியானது நீதி நியாயம் மிக்க கட்சியாக இருப்பதை நான் அறிந்துள்ளேன்.
இருந்தபோதிலும் கடந்த மே மாதம் 1ஆம் திகதி அன்று நடைபெற்ற தொழிலாளர் கூட்டத்தில் தங்களது கட்சியினால் உரைக்கப்பட்ட விடயம் யாதெனில் "எமது கட்சியானது ஊழலற்ற தமிழ் கட்சி எனவும் அவ்வாறு ஊழல்கள் நடைபெற்றால் தகுந்த ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுப்போம்"என கூறப்பட்டது.
நிதிப்பொறுப்பிற்கான சட்ட நடவடிக்கைகள் என்னால் மேற்கொள்ளப்படும் ஆனால் VP அறக்கட்டளையானது எனது மக்களுக்காக உருவாக்கப்பட்டது.
எனவே எனக்கும் எனது மக்களுக்கும் ஏற்பட்ட அநீதி செயற்பாட்டிற்காக தங்களினாலும் தங்கள் கட்சியினாலும் எவ்வாறான நடவடிக்கையினை மேற்கொள்ளப்போகின்றீர்கள் என்பதனை எனக்கும் எனது மக்களுக்கும் 7 நாட்களுக்குள் அறியத்தருமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அண்மையில் மாங்குளத்தில் நடைபெற்ற இலங்கை தமிழரசு கட்சியின் மே தின கூட்டத்தில், அக் கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் உரையாற்றுகையில் தமது கட்சி மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் இல்லை என்றும், அவ்வாறு குற்றச்சாட்டுகள் இடம்பெற்றால் அது தொடர்பானவர்களை கட்சியில் இருந்து நீக்குவேன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.