கிளிநொச்சியில் அதிவேக பைக் மோதி விபத்து – மகளை அழைக்கச் சென்ற இளம் தாய் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!


​கிளிநொச்சியில் இன்று (25.05.2026) பகல் அரங்கேறியுள்ள கொடூர வீதி விபத்தொன்றில், பாடசாலைக்குச் சென்ற தன் மகளை வீட்டிற்கு அழைத்து வருவதற்காகச் சென்ற இளம் தாய் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

​உருத்திரபுரம் பகுதியைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர், இன்று பகல் வேளையில் பாடசாலை முடிவடைந்த தனது மகளை மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு அழைத்து வருவதற்காக உருத்திரபுரத்தில் இருந்து கரடிபோக்கு நோக்கிப் பயணித்துள்ளார்.

​அதேநேரம், கரடிபோக்கிலிருந்து உருத்திரபுரம் நோக்கி அதிவேகமாக வந்த இளைஞர்களின் பெரிய ரக மோட்டார் சைக்கிள் (Heavy Bike), கட்டுப்பாட்டை இழந்து இந்தத் தாயின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியுள்ளது.

​விபத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் தெரிவிக்கையில்...

​"விபத்தை ஏற்படுத்திய இளைஞர்கள், தங்களது பெரிய ரக மோட்டார் சைக்கிளில் அந்த வீதியில் மிக நீண்ட நேரமாகவே கடுமையான அதிவேகத்துடன் அஜாக்கிரதையாக ஓடித்திரிந்தனர்."

​இளைஞர்களின் இந்த ஆபத்தான அத்துமீறிய வேகமே இந்தத் துயரத்திற்கு முதன்மைக் காரணம் என மக்கள் கொந்தளிப்புடன் தெரிவித்துள்ளனர்.

​மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட இளம் தாய், படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

​விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்களில் ஒருவனும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
​இச்சம்பவம் குறித்து கிளிநொச்சி பொலிஸார் வழக்குப்பதிவு செய்து, விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

பாடசாலைக்குச் சென்ற மகளைக் கூட்டச்சென்ற தாய், வீதி விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
புதியது பழையவை