கொழும்பு, ஜூன் 19 – 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (G.C.E. O/L) பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (19.06.2026) இரவு அல்லது நாளை (20.06.2026) அதிகாலை இணையதளத்தின் ஊடாக வெளியிடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பரீட்சைத் திணைக்களம் பெறுபேறுகளை வெளியிடுவதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைத் திணைக்களம் தற்போது பெறுபேறுகளை இணையதளத்தில் பதிவேற்றுவது உள்ளிட்ட தொழில்நுட்ப மற்றும் நிர்வாகப் பணிகளை நிறைவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
மாணவர்கள் தங்களது பரீட்சைச் சுட்டெண் அல்லது தேசிய அடையாள அட்டை இலக்கத்தைப் பயன்படுத்தி, பரீட்சை பெறுபேறுகளை பின்வரும் உத்தியோகபூர்வ இணையதளங்கள் மூலம் பார்வையிட முடியும்:
• www.doenets.lk
• www.results.exams.gov.lk
பெறுபேறுகள் வெளியிடப்பட்ட உடனேயே அதிகளவிலான மாணவர்கள் ஒரே நேரத்தில் இணையதளங்களை அணுகுவதால், சில நேரங்களில் இணையதளங்களில் தாமதம் அல்லது நெரிசல் ஏற்படக்கூடும் என பரீட்சைத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.