ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் கம்சட்கா தீபகற்பத்தில் வெள்ளிக்கிழமை 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது அப்பகுதி கடலோரத்தில் அண்மையில் பதிவான தொடர் நில அதிர்வுகளில் ஒன்று என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்ய அறிவியல் அகாடமியின் (RAS) ஒருங்கிணைந்த புவியியல் சேவையின் (UGS) பிராந்தியப் பிரிவை மேற்கோள் காட்டி, அரச செய்தி நிறுவனமான RIA Novosti இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
15.4 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மையப்பகுதி கம்சட்கா பிராந்தியத்தின் நிர்வாக மையமான பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சட்ஸ்கி நகரிலிருந்து சுமார் 183 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நில அதிர்வு துறைமுக நகரமான பெட்ரோபாவ்லோவ்ஸ்க் - கம்சட்ஸ்கியிலும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக, ஒருங்கிணைந்த புவியியல் சேவையின் தகவலின்படி, கம்சட்கா கடலோரப் பகுதியில் 06:51 UTC மணியளவில் 5.6 ரிக்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கமும் பதிவாகியிருந்தது.
அதன் அளவு குறைவாக இருந்தபோதிலும், சில மக்கள் வசிக்கும் பகுதிகளில் அந்த நில அதிர்வு அதிகமாக உணரப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.