மட்டக்களப்பு புனித மரியாள் ஆலயத்தில் வைத்து கடந்த 1988, யூன்,06, ல் சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்களின் 38,வது ஆண்டு நினைவுநாள் இன்று 2026, யூன்,06,
அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ 1948,ஆகஷ்ட்,09, ம் திகதி மட்டக்களப்பு புளியந்தீவில் பிறந்து வளர்ந்து ஆரம்பக்கல்வியை புனித மேரீஷ் பாடசாலையிலும், உயர்கல்வியை புனித மிக்கல் கல்லூரியிலும் கல்வி கற்றவர்.
தனது குருகுலக் கல்வியை இந்தியா பெங்களூரிலும், சென்னையிலும் பயின்று 1972. 09. 21 நாள் அன்று குருப்பட்டத்தை மட்டக்களப்பு மறைமாவட்ட பிஷப் கிளரின் ஆண்டகை முன்னிலையில் ஏற்றார் .
உதவிப் பங்குத்தந்தையாக மட்டக்களப்பு நகர் தேவாலயத்திலும், மட்டக்களப்பு தாண்டவன்வெளி மாதா தேவாலயத்திலும், திருகோணமலை மாதா தேவாலயத்திலும், சின்னக்கடை திருகோணமலை தேவாலயத்திலும் பணிபுரிந்து 1978ம் ஆண்டு மட்டக்களப்பு ஆயர் இல்லத்தின் நிருவாகத்துக்கு நிதிப் பொறுப்பாளராக செயலாற்றினார்.
1981ம் ஆண்டு மறைக்கோட்ட முதல்வரானார். இதே காலப்பகுதியில் கல்லாறு தேவாலயத்தில் பங்குத்தந்தையாகவும் இருந்தார். 1984ம் ஆண்டு மட்டக்களப்பு மறைக்கோட்ட முதல்வராக பொறுப்பேற்றார்.
1985ஆம் ஆண்டு காலப்பகுதியில் துன்புறுத்தப்படும் மக்களுக்காக குரல் கொடுக்கும் அமைப்பான மட்டக்களப்பு மாவட்ட பிரஜைகள் குழு தலைவராக இருந்த அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்கள் பலத்த சவால்கள், அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தளராது பணியாற்றி கைதுகள் செய்யப்பட்ட அப்பாவிகளுக்காக தனது உயிரையும் துச்சமென மதித்து இராணுவ முகாம்களுக்குச் சென்று அவர்களின் விடுதலைக்காக பரிந்து பேசியவர்.
கிழக்குமாகாணத்தில் சிங்கள இராணுவத்தினால் நடாத்தப்பட்ட நற்பட்டிமுனை, உடும்பன்குளம், கொக்கொட்டிச்சோலை இறால் பண்ணை, மயிலந்தனை போன்ற இடங்களில் நடத்தப்பட்ட தமிழினப் படுகொலைகளை வெளி உலகிற்கு கொண்டுவருவதில் அருட்தந்தை சந்திரா அவர்களின் பங்கு குறிப்பிடத்தக்களவு இருந்தன. அத்துடன் தமிழ் ஆயுதக்குழுக்கள் முன்னெடுத்த படுகொலைகள் மற்றும் கடத்தல்களை சர்வதேசம் வரையில் கொண்டு சென்றவர்.

அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்கள் 1988,யூன்,06 ஆம் திகதி தனது பங்குப்பணிமனையில் இருந்த வேளை இந்திய இராணுவத்துடன் இணைந்து செயற்பட்ட தமிழ் ஆயுத ஒட்டுக்குழுவால் சுட்டுக்கொல்லப்பட்டார்..
கிழக்கு மாகாணத்தினைப்பொறுத்த வரையில் அருட்தந்தை சந்திரா பெர்னாடோ மட்டுமல்ல உண்மையான தமிழ் தேசிய தலைமையினை ஏற்றுக்கொண்ட வணசிங்கா அதிபர் அவர்களையும், ஆரையம்பதியைச் சேர்ந்த கனகரெத்தினம் அதிபர் ,கணபதிப்பிள்ளை அதிபர் அவர்களையும் இதே ஆயுதக்குழுவினரே படுகொலை செய்தனர்.
அன்னாரின் சேவைக்காக விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகுவால் 'நாட்டுப்பற்றாளர்' கௌரவம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.