தமிழ் மக்களின் வாழ்வியலையும் தியாகங்களையும் சொல்லிசை (Rapper) மூலம் பாடிவந்த யாழ் பாடகர் சங்கீதன், பயங்கரவாத தடைச்சட்டத்தின் (PTA) கீழ் சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கிளிநொச்சியில் இன்று(06.06.2026) பாரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலைஞர்கள், மதத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
"சொல்லிசைப் பாடகன் குற்றவாளியா?" எனக் கேள்வி எழுப்பியதுடன், சங்கீதனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
"பாடினால் சிறையா? பேசினால் கைதா?", "கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்காதே" என அநீதியான கைதுகளுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
சட்டத்தை அடக்குமுறை கருவியாகப் பயன்படுத்துவதை நிறுத்தி, கொடூரமான பயங்கரவாத தடைச்சட்டத்தை (PTA) உடனடியாக நீக்க வேண்டும் எனப் பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒரு கலைஞனின் படைப்புரிமையையும், மக்களின் பேச்சுச் சுதந்திரத்தையும் நசுக்கக் கூடாது என இப்போராட்டத்தின் மூலம் மக்கள் தங்களின் பலத்த எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.