பிலிப்பைன்ஸின் மிண்டனாவோ (Mindanao) பிராந்தியத்தில் இன்று(08.06.2026) காலை ஏற்பட்ட மிகச் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 129 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடலுக்கு அடியில் நில அதிர்வு
இன்று காலை உள்ளூர் நேரப்படி 07:37 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகியுள்ளது. கடலுக்கு அடியில் சுமார் 10 முதல் 35 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நில அதிர்வு ஏற்பட்டதாக அமெரிக்க மற்றும் ஜேர்மனிய புவியியல் ஆய்வு மையங்கள் தெரிவித்துள்ளன.
நிலநடுக்கத்தின் வீரியம் காரணமாக ஜெனரல் சாண்டோஸ் (General Santos) நகரிலுள்ள பல வணிக வளாகங்கள் மற்றும் குடியிருப்புக் கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன.
சரங்கானி மாகாணத்தின் அலபெல் (Alabel) நகர பொலிஸ் தலைமை அலுவலகக் கட்டிடத்திலும் பெரிய அளவிலான விரிசல்கள் ஏற்பட்டுள்ளன.
"நாங்கள் எங்கள் வாழ்நாளில் அனுபவித்த மிகச் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இதுதான். கொடியேற்ற நிகழ்வின் போது திடீரென நிலம் அதிரத் தொடங்கியதால் மக்கள் நிலைதடுமாறி ஓடினர், நடுக்கத்தின் அதிர்ச்சியில் சிலர் மயக்கமடைந்தனர்"
என அலபெல் நகர பொலிஸ் அதிகாரி தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார்.
பிலிப்பைன்ஸ் - இந்தோனேசியாவிற்கு சுனாமி எச்சரிக்கை
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ் நில அதிர்வு நிறுவனம் மற்றும் அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு ஆகியன பிலிப்பைன்ஸ் மற்றும் அதன் அண்டை நாடான இந்தோனேசியாவிற்கு அவசர சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளன.