வாகன இலக்கத்தகடுகள் அச்சிடும் பணிகள் நீண்ட காலத்துக்கு பின்னர் ஆரம்பம்.!

கடந்த ஓராண்டுக்கும் மேலாகத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த வாகன இலக்கத் தகடுகள் அச்சிடும் பணிகள், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதியமைச்சர் கலாநிதி பிரசன்ன குணசேன தலைமையில் இன்று (08.06.2026) உத்தியோகபூர்வமாகத் தொடக்கி வைக்கப்பட்டுள்ளன.

வேரஹரவில் அமைந்துள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகனப் பரிசோதனை மற்றும் பயிற்சி மைய வளாகத்தில் இந்த அச்சிடும் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த 22 வருடங்களாக வாகன இலக்கத் தகடுகளை அச்சிட்டு வந்த தனியார் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ ஒப்பந்தக் காலம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து புதிய நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான முறையான டெண்டர் நடைமுறைகளைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்த்தல் அபிவிருத்தி அமைச்சு மேற்கொண்டது.

அதன்படி, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘சவுத் ஏசியன் டெக்னாலஜி’ நிறுவனமும், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களமும் இணைந்து தற்போது இந்த அச்சிடும் பணிகளை மீண்டும் தொடங்கியுள்ளன.

மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் , கார், வான் மற்றும் பேருந்துகள் உட்பட அனைத்து வகையான வாகனப் பிரிவுகளுக்கும் நிறுத்தப்பட்டிருந்த இலக்கத் தகடுகள் அச்சிடும் பணிகள் இன்று முதல் முழுவீச்சில் நடைபெறவுள்ளன.

கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக நிலவிய இழுபறியால் சுமார் 4,00,000 வாகனங்களுக்கான இலக்கத் தகடுகள் தேங்கிக்கிடக்கின்றன.

புதிய ஒப்பந்தத்தின்படி, அச்சிடும் இயந்திரங்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரிக்கப்பட்டு, இந்த நிலுவைகள் அனைத்தும் விரைவாக வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை