மட்டக்களப்பு பிரதான பஸ் தரிப்பு நிலையப் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் இன்று (19.06.2026) மாலை மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பஸ் நிலையத்திற்கு அண்மையில் உள்ள வாவியை ஒட்டிய பகுதியில், மரம் ஒன்றின் கீழ் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
இதனை அவதானித்த பொதுமக்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மட்டக்களப்பு தலைமையக பொலிஸார், தமது ஆரம்பக்கட்ட விசாரணைகளை மேற்கொண்டனர்.
எனினும், உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது மீட்கப்பட்ட சடலம், பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை.!
உயிரிழந்த நபர் தொடர்பான ஏதேனும் தகவல்கள் தெரிந்தாலோ அல்லது அவரை அடையாளம் காண முடிந்தாலோ, உடனடியாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரை தொடர்புகொள்ளுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.