மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேச சபையினால் (2026.06.15 - 2026.06.20) வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள "விசேட டெங்கு ஒழிப்பு வார" வேலைத்திட்டத்தின் கீழ், பாலையடிவட்டை பொதுச் சந்தை அமைந்திருந்த பகுதியில் நேற்று (16.06.2026)ஆம் திகதி பாரிய விசேட சிரமதானப் பணியொன்று முன்னெடுக்கப்பட்டது.
இப்பகுதியானது கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் முகாம் அமைக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் (2026.04.02) இராணுவத்தினர் இங்கிருந்து முழுமையாக வெளியேறியிருந்தனர்.
நீண்டகாலமாகப் பராமரிப்பின்றிப் புதர்மண்டிக் காணப்பட்ட இப்பகுதி, தற்போது டெங்கு நுளம்புகள் பெருகும் அபாயமிக்க இடமாக மாறியிருந்தது.
இதனைக் கருத்திற்கொண்டு, போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் வி. மதிமேனன் மற்றும் உபதவிசாளர் த. கயசீலன் ஆகியோரின் நேரடித் தலைமையில் இப்பகுதியில் பாரிய தூய்மையாக்கல் பணி ஆரம்பிக்கப்பட்டது.
வெல்லாவெளிப் பகுதி பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் (PHI), பிரதேச சபை உத்தியோகஸ்தர்கள், ஊழியர்கள் மற்றும் கிராமப் பொதுமக்கள் எனப் பலரும் ஒன்றிணைந்து டெங்கு பரவக்கூடிய இடங்களை இனங்கண்டு துப்புரவு செய்தனர்.
நீண்டகாலமாகக் தேங்கிக்கிடந்த கழிவுகள் மற்றும் காடுகளை அகற்றி நிலத்தை முழுமையாகத் துப்புரவு செய்வதற்காகப் பிரதேச சபைக்குச் சொந்தமான ஜே.சி.பி (JCB) போன்ற கனரக வாகனங்களும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.
நீண்ட காலத்திற்குப் பின் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ள பொதுச் சந்தை வளாகத்தை, இத்தகையதொரு விசேட திட்டத்தினூடாகத் தூய்மைப்படுத்தியமைக்காகப் பிரதேச மக்கள் தமது நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.