புகழ்பெற்ற மலையாள நடிகர் சலீம் குமார் காலமானார்.!

மலையாள திரையுலகின் முன்னணி நடிகரும், தேசிய விருது பெற்ற கலைஞருமான சலீம் குமார்(56) உடல்நலக்குறைவால் காலமானார்.

திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலை கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சலீம் குமார், தீவிர சிகிச்சைப் பிரிவில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

திரைத்துறைப் பயணம்
கேரள மாநிலத்தின் பரவூரில் பிறந்த சலீம் குமார், மிமிக்ரி கலைஞராக தனது கலைப்பயணத்தை தொடங்கினார். பின்னர் 1997-ம் ஆண்டு வெளியான ’இஷ்டமானு நூறு வட்டம்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

அதன்பிறகு நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர வேடங்களிலும் 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து மலையாள சினிமாவின் தனித்துவமான கலைஞராக உயர்ந்தார்.

2010-ஆம் ஆண்டு வெளியான ’ஆடமின்டே மகன் அபு’ திரைப்படத்தில் வெளிப்படுத்திய சிறப்பான நடிப்புக்காக தேசிய திரைப்பட விருதில் சிறந்த நடிகருக்கான விருதை சலீம் குமார் வென்றார். மேலும் பல முறை கேரள மாநில திரைப்பட விருதுகளையும் பெற்றுள்ளார்.

நடிகராக மட்டுமல்லாமல் இயக்குநராகவும் தடம் பதித்த சலீம் குமார், கருத்த யூதன் திரைப்படத்தின் கதைக்காக கேரள மாநில அரசின் சிறந்த கதைக்கான விருதைப் பெற்றார்.

மலையாளத்தை தாண்டி தமிழிலும் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்திய அவர், நேரம், நெடுஞ்சாலை, மரியான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
புதியது பழையவை