மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி கடற்கரை வீதியில் அமைந்துள்ள புடவைக் கடையொன்றில் நேற்று மாலை (20.06.2026) திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், கடை முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளது.
இப்றாகீம் என்பவருக்குச் சொந்தமான இப்புடவைக் கடையின் உரிமையாளர், நேற்று மதியம் உணவிற்காக கடையைப் பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றிருந்த நிலையிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கடையில் திடீரெனப் பற்றிய தீ நொடிப்பொழுதில் வேகமாகப் பரவியதில், உள்ளே இருந்த பல இலட்சம் ரூபாய் பெறுமதியான ஆடைகள் மற்றும் பொருட்கள் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளன.
சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், காத்தான்குடி நகர சபை மற்றும் மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
காத்தான்குடி பொலிஸார், நகர சபை ஊழியர்கள், அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர தீவிரமாகப் போராடினர்.
அனைவரினதும் கூட்டு முயற்சியால் தீ விரைவாகக் கட்டுப்படுத்தப்பட்டதால், அருகிலிருந்த ஏனைய வர்த்தக நிலையங்கள் மற்றும் குடியிருப்பு வீடுகளுக்கு தீ பரவுவது முற்றாகத் தடுக்கப்பட்டது.
விபத்து நடந்த இடத்திற்கு காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் நேரில் சென்று, தீயணைப்புப் பணிகளை ஒருங்கிணைத்ததுடன் முதற்கட்ட விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.
மின் கசிவு (மின் ஒழுக்கு) காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் சந்தேகிக்கப்படும் நிலையில், காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இவ் விபத்து காரணமாக காத்தான்குடி கடற்கரை வீதிப் பகுதியில் இன்று பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தது.