மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராகப் பணியாற்றி ஓய்வுபெறும் திருமதி கலாரஞ்சினி கணேசலிங்கம் அவர்களுக்கான பிரியாவிடை மற்றும் பாராட்டு விழா (27.06.2026) வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சுகாதார அமைச்சின் பணியாளர் நாயகம் அசேல குணவர்த்தன அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
திருமதி கலாரஞ்சினி கணேசலிங்கம் அவர்கள் சுகாதாரத் துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு மாவட்டங்களில் தனது அர்ப்பணிப்புமிக்க சேவையை வழங்கியுள்ளார்.
குறிப்பாக, கடந்த எட்டு ஆண்டுகளாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராகப் பணியாற்றி, அதன் நிர்வாக மற்றும் சுகாதார சேவைகளின் முன்னேற்றத்திற்கு மிகக் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார் என்பது நினைவுகூரத்தக்கது.
அவரது நீண்டகால சேவையைப் பாராட்டி, வைத்தியசாலையின் அதிகாரிகள் மற்றும் சுகாதார உத்தியோகத்தர்களினால் வாழ்த்துரைகள் நிகழ்த்தப்பட்டன.
அவருக்குப் பொன்னாடை போர்த்தப்பட்டு, நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிப்பு செய்யப்பட்டது.
மேலும், கடந்த ஆண்டுகளில் அவரது வழிகாட்டலில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் சாதனைகள் அடங்கிய ஆவணப் புத்தகம் ஒன்றும் இதன்போது அவருக்கு வழங்கி வைக்கப்பட்டது.
"வைத்தியசாலையின் வளர்ச்சிக்கு திருமதி கலாரஞ்சினி அவர்கள் ஆற்றிய பணிகள் என்றும் நினைவுகூரத்தக்கவை" என அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் தங்களது நன்றியுணர்வை வெளிப்படுத்தினர்.
இந்நிகழ்வில்
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர். முரளீஸ்வரன்,
கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் ஜி. சுகுணன்,
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் திருமதி மைத்திலி பாத்லட்
உள்ளிட்ட வைத்திய நிபுணர்கள், துறைசார் வல்லுநர்கள், அதிகாரிகள், சுகாதார உத்தியோகத்தர்கள் மற்றும் வைத்தியசாலை பணியாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு பணிப்பாளருக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.