இலங்கை நீதிபதிகளின் ஓய்வு வயது நீடிப்பு.!

இலங்கையின் உயர் நீதிமன்ற மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பதற்கான அரசியலமைப்புத் திருத்த முன்மொழிவுக்கு, ஆசியா மற்றும் பசிபிக் சட்ட சங்கம் தனது கவலையைத் தெரிவித்துள்ளது.

இந்த திடீர் நடவடிக்கையானது, நீதித்துறையின் சுதந்திரத்தன்மை மற்றும் அதன் மீது பொதுமக்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் சீர்குலைக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சூழலில் நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிப்பது நீதித்துறையில் செய்யப்படும் அரசியல் தலையீடாகப் பார்க்கப்படலாம் என இலங்கை சட்டத்தரிகள் சங்கம் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு எழுதிய கடிதத்தை ஆதரித்துள்ளது.


எனினும், அரசியலமைப்பின் 107(5) பிரிவின் கீழ் நீதிபதிகளின் ஓய்வு வயது ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், முறையான பொது ஆலோசனைகள் இன்றி இத்தகைய தற்காலிகத் திருத்தங்களை மேற்கொள்ளக் கூடாது என் லவாசியா சங்கம் குறிப்பிட்டுள்ளது.

நீதித்துறை சுதந்திரம் மற்றும் பதவிக்காலப் பாதுகாப்பை வலியுறுத்தும் 'பெய்ஜிங் கோட்பாடுகள் அறிக்கையையும்' இதன்போது லவாசியா சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், பொதுநலவாய வழக்கறிஞர்கள் சங்கத்தின் கவலைகளையும் முன்வைத்து, இலங்கை அரசாங்கம் இந்தத் திருத்தத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும், பகுதி பகுதியான மாற்றங்களைத் தவிர்த்து, சம்பந்தப்பட்ட தரப்பினருடன் முறையான ஆலோசனைகளை நடத்தி சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்த வேண்டும் என்றும் லவாசியா வலியுறுத்தியுள்ளது.
புதியது பழையவை