வட்டுக்கோட்டை தீர்மானத்தை கோரிய தமிழர்களுக்கு சாதாரண மாகாண சபை அதிகாரத்தை கூட தர மறுக்கிறது அரசாங்கம்! - செ.நிலாந்தன்

வடகிழக்கின் அதி உச்ச அதிகாரமான வட்டுக்கோட்டை தீர்மானத்தை நிறைவேற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக போராடி வரும் தமிழ் மக்களுக்கு இன்று சாதாரண மாகாண சபை நிர்வாக அரசியல் அதிகாரத்தை வழங்குவதற்கு கூட அரசாங்கம் தயாராக இல்லை. என ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் செ. நிலாந்தன் தெரிவித்தார். 

மட்டக்களப்பில் நடைபெற்ற வட்டுக்கோட்டை தீர்மானத்தின் ஐம்பதாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெளியிடப்பட்ட பாடல் வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில். 

இலங்கையின் வரலாறு மீண்டும் மீண்டும் திருப்ப திரும்ப எழுதப்படுகிறது. 
வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஐம்பதாவது ஆண்டு வரலாற்று நிறைவை வடகிழக்கு தமிழர்கள் நினைவு கூற தயாராகி வரும் நிலையில்.

ஐம்பதாண்டுகளுக்கு முன்னர் வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்ற காரணமாக அத்தனை பிரச்சினைகளும் இன்றும் அப்படியே தான் இருக்கிறது.

இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் முதல் வடகிழக்கில் உள்ள தமிழர்கள் தங்களது உரிமைகளுக்காக போராடி வருகின்றனர். 
தமிழ் மக்களுக்கான மொழி உரிமை மறுக்கப்பட்டது, நில உரிமை மறுக்கப்பட்டது, கல்வி உரிமை மறுக்கப்பட்டது இதன் காரணமாக தமிழ் மக்கள் தங்களை தாங்களே ஆளுகின்ற ஒரு அரசியல் தீர்வை பெற வேண்டும் என்ற நோக்கில் வட்டுக்கோட்டை தீர்மானத்தை நிறைவேற்றினர்
வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப் பட்ட பின்னரும் கூட தமிழர்கள் தங்களது உரிமைகளை பெறுவதற்காக ஆயுத ரீதியாகவும், அகிம்சை வழியிலும் பல வருடங்களாக போராடி வருகின்றனர்.

ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் மௌனிக்கப்பட்டதன் பின்னர் கடந்த 17 வருடங்களாக அகிம்சை வழியில் மீண்டும் தங்களது உரிமைகளுக்காக தமிழ் மக்கள் போராடிக் கொண்டுதான் இருக்கின்றனர்.
வரலாற்றை படிக்காத சமூகம் வரலாற்றை படைக்க முடியாது. அந்த வகையில் வடகிழக்கு தமிழர்களின் வரலாற்று ரீதியான அரசியல் போராட்டங்களை நினைவு கூறும் இந்த நிகழ்வின் ஊடாக இளம் சந்ததியினர் தங்களது உரிமைகளை பெற்றுக் கொள்ள  எழுச்சியுடன் இருக்கின்றனர்.
எங்கள் இனம், எங்கள் நிலம், எங்கள் உரிமை என்ற வரலாற்று தத்துவ ரீதியான அரசியல் கோட்பாட்டின் அடிப்படையிலான அரசியல் தீர்வவையே கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்கள் கேட்டு போராடி வருகின்றனர். ஆனால் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டங்கள் எப்போதெல்லாம் எழுச்சி கொள்கிறதோ அப்போதெல்லாம் அதனை அடக்கி ஆள்வதற்கு அரசாங்கம் பல்வேறு தந்துரோபாயங்களை கையாண்டு வருகிறது. அதில் மிக முக்கியமானது பயங்கரவாத தடைச் சட்டம்.

அண்மையில் கிளிநொச்சி இளைஞர் ஒருவர் எழுச்சி பாடல் ஒன்றை பாடியதற்காக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை அடக்கி ஒடுக்கவதற்கே இந்த பயங்கரவாத தடைச் சட்டத்தை அரசாங்கம் கூடுதலாக பயன்படுத்தி உள்ளது.

ஆனால் என்னதான் அரசாங்கம் பல்வேறு அடக்குமுறை சட்டங்களை பிரயோகித்து தமிழ் மக்களின் போராட்டங்களை முடக்கினாலும் அவர்கள் இன்று வரை தங்களது உரிமைகளுக்காக தமிழர்கள் போராடிக் கொண்டே உள்ளனர்.

அந்த வகையில் மட்டக்களப்பில் வெளியிடப் படும் வட்டுக்கோட்டை தீர்மானம் ஐம்பது நினைவு எழுச்சி பாடலும் ஒரு எடுத்துக் காட்டாகும்.

வடகிழக்கு தமிழர்கள் வட்டுக்கோட்டை தீர்மானத்தின் ஐம்பதாவது ஆண்டை நினைவு கூற தயாராகும் நிலையில் தமிழ் மக்கள் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் எதற்காக வட்டுக்கோட்டை தீர்மானத்தை நிறைவேற்றினார்களோ அந்த காரணிகள் அனைத்தும் இன்றுவரை அப்படியே தான் இருக்கிறது.

அதாவது தமிழ் மக்கள் தங்களை தாங்களே ஆள கூடிய அரசியல் தீர்வை கோரி இன்று ஐம்பது ஆண்டுகள் ஆகியும் இன்னும் தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கு எந்த தீர்வுகளும் கிடைக்கவில்லை. 
தமிழ் மக்களின் போராட்டத்திற்கான நியாயப்பாடுகள் அப்படியே உள்ளது.
ஒரு சாதாரண மாகாண சபை நிர்வாக அரசியல் உரிமையை கூட வழங்குவதற்கு அரசாங்கம் தயாராக இல்லை.

இன் நிலையில்  தமிழ் மக்கள் தங்களுக்கான உரிமைகள், அரசியல் அதிகாரம் கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவார்கள். தமிழ் மக்களுக்கான நியாயமான அரசியல் அதிகாரம் கிடைக்கும் வரை தமிழர்களின் அடுத்த சந்ததியினரும் எம்மை விட அதிக எழுச்சியோடு போராடுவார்கள். அதனை  நாம் இப்போது கண்ணூடாக காண்கின்றோம். பயங்கரவாத தடைச் சட்டத்தை பிரயோகித்து  இளைஞர்கள் மீது அடக்குமுறையை பிரயோகித்த போதும் அவர்கள் இன்று வரை அகிம்சை வழியில் பல்வேறு வடிவங்களில் தங்களது உரிமைகளுக்காக போராடி வருகின்றனர். என தெரிவித்தார்.
புதியது பழையவை