யாழ்ப்பாணம் மானிப்பாய் பிரதேச சபையின் நிரந்தர மற்றும் தற்காலிக பணியாளர்கள் இருவரை அவர்களுக்கு மேலுள்ள உத்தியோகத்தர் ஒருவர் தனது வீட்டுக்கு வர்ணம் பூச அழைத்துச் சென்றதாக மானிப்பாய் பிரதேச சபையின் உறுப்பினர் அச்சுதபாயன் குற்றம் சுமத்தியுள்ளார்.
நேற்றையதினம் அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
மிகவும் வறுமைக் கோட்டிற்கு உட்பட்டவர்கள்
கடமை நேரத்தில், இரண்டு ஊழியர்களை வற்புறுத்தி அழைத்துச் சென்று, கச்சேரிக்கு அண்மித்த பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு அந்த உத்தியோகத்தர் இவ்வாறு வர்ணம் பூசுவித்துள்ளார்.
இது குறித்து நான் அந்த ஊழியர்களை தொடர்புகொண்டு வினவியபோது அவர்கள் அதனை ஒத்துக் கொண்டுள்ளனர்.
தாங்கள் இவ்வாறு பல தடவைகள் வற்புறுத்தலின் பேரில் அவரது வீட்டு தனிப்பட்ட வேலைகள் செய்ததாகவும், இதற்கு தமக்கு எள்ளளவும் விருப்பம் இல்லை என்றும் கூறியுள்ளனர்.
அத்துடன் தாம் வேலையில் இருந்து நீக்கப்பட்டால் தற்கொலை செய்வதை தவிர வேறு வழி இல்லை என்று கூறியுள்ளனர்.
அந்த ஊழியர்கள் உண்மையில் மிகவும் வறுமைக் கோட்டிற்கு உட்பட்டவர்கள். தமக்கு மேல் நிலையில் இருக்கின்ற உத்தியோகத்தர்களது கருத்துக்கை புறக்கணிக்க முடியாமல் அவர்கள் இவ்வாறு செய்துள்ளமை அம்பலமாகியுள்ளது.
எனவே இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விரைந்து, மானிப்பாய் பிரதேச சபையின் மீது இது குறித்து விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறான சம்பவங்கள் இனிமேலும் இடம்பெறக்கூடாது.
ஊழலை ஒழிப்பதாக ஆட்சிக்கு வந்த அரசாங்கம் இதனை வேடிக்கை பார்க்கிறதா? எனவே அவர்கள் கூறியது உண்மை என்றால் இது குறித்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விரைந்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.