சூரியகாந்தி விதை என நினைத்து ஆமணக்கு விதை சாப்பிட்ட 22 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி - நால்வரின் நிலைமை கவலைக்கிடம்!

திருகோணமலை, கந்தளாய் பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற விஷ விதைகளை உட்கொண்ட தரம் 6-இல் கல்வி பயிலும் 22 மாணவர்கள் திடீரெனப் பாதிக்கப்பட்டு, கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

​கந்தளாய் பேராறு பகுதியில் அமைந்துள்ள பாடசாலையில் தரம் 6-இல் கல்வி பயிலும் மாணவர் ஒருவர், வழமையாக வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்படும் சூரியகாந்தி விதைகளை பாடசாலைக்கு எடுத்துச் சென்று சக மாணவர்களுடன் பகிர்ந்து உண்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

​இந்நிலையில், இன்றைய தினம் (20.07.2026)ஆம் திகதி  சூரியகாந்தி விதைகள் எனத் தவறாக நினைத்து, வீட்டில் இருந்த ஆமணக்கு விதைகளையும் சேர்த்துச் எடுத்துச் சென்று நண்பர்களுடன் பகிர்ந்து உண்டுள்ளார். 

இதன் காரணமாகவே குறித்த மாணவர்கள் திடீர் உடல்நலக் குறைவுக்கு ஆளாகியுள்ளனர்.

​இச்சம்பவத்தில் 20 மாணவர்கள் மற்றும் 2 மாணவிகள் உட்பட மொத்தம் 22 மாணவர்கள் கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். 

இவர்கள் ஆமணக்கு விதைகளையே உட்கொண்டிருக்கலாம் என கந்தளாய் வைத்தியசாலையின் மருத்துவ அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.

​வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் 04 பேரின் நிலைமை சற்று கவலைக்கிடமாக உள்ளதால், அவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

​இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், கந்தளாய் பொலிஸார் இச்சம்பவம் தொடர்பாக விரிவான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை