பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) எதிர்வரும் ஆகஸ்ட் 4ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் இன்று (24.07.2026) ஆம் திகதி உத்தரவிட்டது.
மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி அ. தர்சினி முன்னிலையில் நடைபெற்ற விசாரணையின் போது, சந்திரகாந்தன் நிகழ்நிலை (வீடியோ) ஊடாக ஆஜர்படுத்தப்பட்டார்.
அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், அவரது சார்பில் இரண்டு சட்டத்தரணிகள் முன்னிலையாகினர்.
2008ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வழக்குத் தாக்கல் செய்துள்ளது. இவ்வழக்கு கடந்த ஜூன் 15ஆம் திகதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இவ்வழக்கில் மூன்றாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள சந்திரகாந்தன், ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பான மூன்று குற்றச்சாட்டுகள் மற்றும் கல்லடி பகுதியில் உள்ள காணி தகராறு தொடர்பான வழக்கில் இன்று நிகழ்நிலை ஊடாக ஆஜர்படுத்தப்பட்டார்.
சாட்சிகளும் நீதிமன்றில் முன்னிலையாகிய நிலையில் விசாரணை முன்னெடுக்கப்பட்டது.
விசாரணையின் போது, பாதுகாப்பு காரணங்களையும், நீண்ட தூரத்திலிருந்து அழைத்து வருவதில் உள்ள சிரமங்களையும் சுட்டிக்காட்டி, சந்திரகாந்தனை மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றுமாறு சந்திரகாந்தன் தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பணம் ஒன்றை செய்தது. இது தொடர்பாக உரிய அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
வழக்கை பரிசீலித்த நீதிமன்றம், சந்திரகாந்தனை எதிர்வரும் ஆகஸ்ட் 4ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது. மேலும், கல்லடி காணி தகராறு தொடர்பான வழக்கை ஒக்டோபர் 29ஆம் திகதிக்கு ஒத்திவைத்ததுடன், முதலாம் சந்தேகநபருக்கு எதிராக பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தகவலின்படி, 2008ஆம் ஆண்டு டி-56 ரக துப்பாக்கிகள் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் கொலைச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஜனவரி 9ஆம் திகதி கல்லடி முருகன் கோவில் அருகே முன்னாள் காவல்துறை அதிகாரி உள்ளிட்ட இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம், மே 22ஆம் திகதி காத்தான்குடி பிரதான வீதியில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் மற்றும் ஆகஸ்ட் 20ஆம் திகதி வவுணதீவு கொத்தியாபுல பகுதியில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் ஆகிய வழக்குகளுடன் தொடர்புபடுத்தி சந்திரகாந்தன் சந்தேகநபராக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.