மட்டக்களப்பு மாவட்டம், போரதீவுப்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் ஆர்வத்துடன் பயிரிடப்பட்ட சிறுதானியங்களை அறுவடை செய்யும் விழா இன்று (24.07.2026)ஆம் திகதி வெள்ளிக்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்றது.
பிரதேச செயலாளர் திரு. சோ.ரங்கநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், செயலக வளாகத்தில் பயிரிடப்பட்டிருந்த கம்பு, இறுங்கு மற்றும் தினை உள்ளிட்ட பல்வேறு வகையான சிறுதானியப் பயிர்கள் வெற்றிகரமாக அறுவடை செய்யப்பட்டன.
இப்பயிர்கள் எவ்வித கிருமிநாசினிகளும் தெளிக்கப்படாமல், முற்றிலும் இயற்கை முறையில் வளர்க்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
மனித உடலுக்கு மிகவும் ஆரோக்கியம் தரக்கூடிய இந்தச் சிறுதானியங்களை அனைவரும் தங்கள் வீடுகளில் பயிரிடுவதன் மூலம், நோயற்ற நீண்ட ஆயுளுடனான நல்வாழ்வைப் பெற முடியும் என இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
அரசு உத்தியோகத்தர்களிடையே விவசாய ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையிலும், சிறுதானியச் செய்கையின் முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையிலும் இந்நிகழ்வு அமைந்திருந்தது.
இதில் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் கணக்காய்வாளர், பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் பெருந்திரளான பணியாளர்கள் கலந்துகொண்டு மிகுந்த மகிழ்ச்சியுடன் அறுவடைப் பணிகளில் ஈடுபட்டனர்.