இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 57,000ஐக் கடந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தகவல் தெரிவித்துள்ளது.
இதன்படி, இந்நாட்டில் பதிவாகியுள்ள ஒட்டுமொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 57,668ஆக உயர்வடைந்துள்ளதுடன், டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் டெங்கு பரவலின் தீவிரம் கணிசமாக அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டும் வகையில், கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டும் புதிதாக 1,253 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய புள்ளிவிபரங்களின்படி, கொழும்பு மாவட்டத்தில் 11,811 நோயாளர்களும் கம்பஹா மாவட்டத்தில் 11,443 நோயாளர்களும் என்றவாறு மேல் மாகாணத்தின் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலேயே மிக அதிகளவிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
மேல் மாகாணத்தில் மாத்திரம் 23,000க்கும் மேற்பட்ட நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில், நுளம்பு பெருகும் இடங்களை அழித்து, டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு சுகாதாரப் பிரிவினர் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.