தமிழ்த் தேசியப் பேரவை பிரதிநிதிகள் தமிழக முதல்வர் விஜய்யுடன் முக்கிய சந்திப்பு.!

இலங்கையின் வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசமான ஈழத்தமிழ்த் தேச மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல் தரப்புகளில் முக்கிய அரசியல் கூட்டமைப்பாக விளங்கும் தமிழ்த் தேசியப் பேரவையினராகிய நாம் நேற்று சென்னையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை தமிழ்நாடு அரசுத் தலைமைச் செயலகத்தில் சந்தித்து விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளோம். எழுத்துமூலமாக கோரிக்கை கடிதம் கையளித்துள்ளோம், அக்கடிதத்தின் பிரதி இணைக்கப்பட்டுள்ளது. 

இச்சந்திப்பில், ஈழத்தமிழ் மக்கள் தற்போது எதிர்நோக்கும் அரசியல், மனித உரிமைகள் பிரச்சினைகள், ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறை ஒழிக்கப்பட்டு தமிழர் தேசத்தின் இறைமையை அங்கீகரிக்கும் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வின் அவசியம், ஈழத்தமிழர் இனவழிப்புக்கு சர்வதேச சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியம், இந்திய–ஈழத் தமிழ்க் கடற்தொழிலாளர்களின் பிரச்சினைக்கு நிலையான தீர்வு காணும் நடவடிக்கைகள், இந்தியாவில் தங்கியுள்ள ஈழத் தமிழ் அகதிகளின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது.

குறித்த சந்திப்பில், ஈழத்தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில், தமிழ்த் தேசியப் பேரவையைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஏழு பேர் கொண்ட பிரதிநிதிக் குழு கலந்துகொண்டது.
அக்குழுவில் 
தமிழ்த் தேசியப் பேரவை மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி கஜேந்திரகுமார் பொன்னம்பலம், 
ஜனாதிபதி சட்டத்தரணியும் ஜனநாயகத் தமிழரசு கட்சியின் தலைவருமான கே. வி. தவராசா, 
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளருமான செல்வராசா கஜேந்திரன், முன்னாள்  வடக்கு மாகாண விவசாய அமைச்சரும்  தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவருமான
பொன்னுத்துரை ஐங்கரநேசன் 
, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஷ்,  தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உத்தியோகபூர்வ பேச்சாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான கனகரத்தினம் சுகாஷ், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கொள்கைப் பரப்புச் செயலாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான நடராஜா காண்டீபன் ஆகியோர் பங்கேற்றதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை