மட்டக்களப்பு மாவட்டம் துறைநீலாவணை கிராமத்திற்குச் செல்லும் பிரதான வீதியில் நிலவிவரும் கடுமையான கழிவுப் பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையிலும், டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும் இன்று (05.07.2026) ஆம் திகதி பாரிய சிரமதானப் பணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
துறைநீலாவணை கிராமத்திற்கான பிரதேச சபை உறுப்பினர் சுந்தரலிங்கம் - இளமாறன் தலைமையில் நடைபெற்ற இந்த சிரமதானத்தில், இப்பகுதிக்கான பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ்.ரவிகரன், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு வீதி இருமருங்கையும் துப்பரவு செய்தனர்.
இதன் போது டெங்குப் பெருக்கத்திற்கு வழிவகுக்கும் டின்கள், போத்தல்கள், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் உக்காத கழிவுப் பொதிகள் பெருமளவில் அகற்றப்பட்டன.
இவ்வீதியில் அண்டை கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களும், வர்த்தக நிலையங்கள் மற்றும் கோழிக்கடை உரிமையாளர்களும் கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாகப் பலவந்தமாக கழிவுகளைக் கொட்டி வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
துறைநீலாவணை பொதுமக்களும், பொது அமைப்புகளும், மக்கள் பிரதிநிதிகளும் இணைந்து இந்த வீதியை பலமுறை துப்பரவு செய்து பாதுகாத்து வந்த போதிலும், சில சமூக விரோத சக்திகள் திட்டமிட்டபடி கோழிக்கழிவுகள், வர்த்தக நிலையக் கழிவுகள், இறைச்சிக்காக அறுக்கப்படும் கால்நடைகளின் கழிவுகள் மற்றும் வீடுகளில் சேரும் குப்பைகளை இரகசியமாக இங்கு வீசிவிட்டுச் செல்வது தொடர்கதையாகவே உள்ளது.
இது குறித்து கருத்துத் தெரிவித்த பிரதேச சபை உறுப்பினர் சுந்தரலிங்கம் - இளமாறன்
"கடந்த காலங்களில் இவ்வீதியில் அண்டை கிராமங்களைச் சேர்ந்தவர்கள் கழிவுகளை வீசியபோது, அவர்கள் பலமுறை கையும் மெய்யுமாகப் பிடிக்கப்பட்டுள்ளனர்.
அவ்வாறு பிடிபட்டவர்களின் மன்னிப்புக் கடிதங்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகள் உள்ளிட்ட ஆவணங்கள் சான்றுகளாகப் பத்திரப்படுத்தப்பட்டுள்ளன.
இதனை வீதி எங்கும் குப்பை கொட்டுபவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். இனிவரும் காலங்களில் இந்த வீதியில் கழிவுகளைக் கொட்டுவதை அனைவரும் முற்றாகத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்."
மாகாண ஆளுநருக்கு அவசர கோரிக்கை
இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாணும் பொருட்டு, கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோர் இவ்விடயத்தில் நேரடியாகத் தலையிட்டு, அவசர மற்றும் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என துறைநீலாவணை பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கிராம மக்கள் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
க.விஜயரெத்தினம்