முச்சக்கர வண்டியில் மாடுகள் கடத்தல்- பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்ட பொலிஸ் கொஸ்தாபல் கைது.!

மன்னார் பகுதியில் திருடப்பட்டு, முச்சக்கர வண்டி ஒன்றில் சட்டவிரோதமான முறையில் கடத்திச் செல்லப்பட்ட இரண்டு மாடுகளை மன்னார் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டிருந்த பொலிஸ் கொஸ்தாபல் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

​இன்று (04.07.2026) ஆம் திகதி மன்னார் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட வாகன சோதனையின் போது, சந்தேகத்திற்குரிய முறையில் பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று மறித்து சோதிக்கப்பட்டது.

​அதன்போது, அந்த முச்சக்கர வண்டினுள் மிகவும் கொடூரமான முறையில் கட்டி வைக்கப்பட்டு, சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட இரண்டு மாடுகள் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டன.

​இதனைத் தொடர்ந்து, முச்சக்கர வண்டியில் மாடுகளைக் கடத்தி வந்த நபரை பொலிஸார் கைது செய்தனர். 

அவரிடம் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில், அவர் தற்காலிகமாக பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டிருந்த ஒரு பொலிஸ் கொஸ்தாபல் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
​மீட்கப்பட்ட மாடுகளும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டியும் மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 

கைது செய்யப்பட்ட சந்தேக நபரான பொலிஸ் கொஸ்தாபலை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான மேல் நடவடிக்கைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை