மட்டக்களப்பின் நீண்டகால தேவைகளுக்கு உடனடித் தீர்வு காண்க -மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தல்!

​மட்டக்களப்பு மாவட்ட மக்களின் அன்றாட வாழ்வாதாரப் பிரச்சினைகள், உட்கட்டமைப்புத் தேவைகள் மற்றும் நீண்டகாலமாக நீடித்து வரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக அரசாங்கத்தினதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளினதும் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, அவற்றுக்கான உடனடித் தீர்வுகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

​இன்று (31.07.2026) ஆம் திகதி கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சுனில் ஹந்துன்னெத்தி அவர்களின் தலைமையிலும், மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. எஸ். அருள்ராஜ் அவர்களின் ஏற்பாட்டிலும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

​இக்கூட்டத்தில் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். 

இதன்போது மாவட்டத்தின் முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் எட்டப்பட்ட தீர்மானங்கள் வருமாறு.

​பல ஆண்டுகளாக மக்கள் எதிர்பார்த்து வரும் 'முந்தனையாறு குடிநீர் மற்றும் நீர்வள அபிவிருத்தித் திட்டம்' தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. 

பிரான்ஸ் அபிவிருத்தி முகவர் நிறுவனம் (AFD) இத்திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தத் தயாராக உள்ள நிலையில், இலங்கை அரசாங்கம் இதற்கான நிதி ஒப்பந்தத்தில் தாமதமின்றி கைச்சாத்திட வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது. 

இத்திட்டம் நிறைவேறினால் குடிநீர், விவசாயம், நீர்ப்பாசனம், வெள்ளக் கட்டுப்பாடு மற்றும் சுற்றுலாத்துறைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் எனச் சுட்டிக்காட்டப்பட்டது.

​ஜனாதிபதியின் வாக்குறுதிகள் செயற்படுத்தப்பட வேண்டும்.

​கடந்த மே மாதம் மட்டக்களப்பிற்கு விஜயம் செய்த ஜனாதிபதி அவர்கள் உறுதியளித்த அபிவிருத்தித் திட்டங்களும் நிதி ஒதுக்கீடுகளும் வெறும் அறிவிப்புகளாக இல்லாமல், உடனடியாக நடைமுறை வடிவத்திற்கு வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

​பட்டிருப்பு பாலம், மண்டூர்–குறுமண்வெளி பாலம், அம்பிளாந்துறை–குருக்கள்மடம் பாலம், சந்திவெளி–திகிலிவெட்டை பாலம், வெல்லாவெளி–திவுலானை வீதி மற்றும் அம்பிளாந்துறை–வில்லுக்குளம் வீதி ஆகிய திட்டங்களுக்கான சாத்தியவள ஆய்வு அறிக்கைகளை விரைவாகத் தயாரித்து, பணிகளைத் தாமதமின்றி ஆரம்பிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

உறுகாமம் மீனவர் சங்கத்தின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு, மீனவர்கள் அனைவரும் உறுகாமம் குளத்தில் அமைந்துள்ள இறங்குதுறையிலேயே தங்களது தோணிகளை நிறுத்திப் பயன்படுத்த வேண்டும் என்ற முன்மொழிவு ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

​பெரிய கல்லாறு பொது விளையாட்டு மைதானத்தை முதற்கட்டமாகச் சுத்தப்படுத்தி, அதன் பின்னர் விரிவாக்கப் பணிகளை முன்னெடுப்பதாகத் தீர்மானிக்கப்பட்டது.

​மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினை, மனித–யானை மோதல், களுவாஞ்சிக்குடி ஐஸ் தொழிற்சாலைப் பிரச்சினை, விவசாயிகளின் நெல் கொள்வனவு மற்றும் நெல்லுக்கான உத்தரவாதக் கொள்விலை போன்ற அத்தியாவசியப் பிரச்சினைகள் தொடர்பில் துறைசார் அமைச்சுகள் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரப்பட்டது.

​மட்டக்களப்பு மாவட்ட மக்களின் குடிநீர், விவசாயம், மீன்பிடி, போக்குவரத்து, கல்வி மற்றும் உட்கட்டமைப்பு என அனைத்துத் துறைகளிலும் நிலையான தீர்வுகளைப் பெற்றுத்தரத் தொடர்ந்தும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படும் என இக்கூட்டத்தில் தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களால்  சுட்டிக்காட்டப்பட்டது.
புதியது பழையவை