மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிசோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டாரியாவெளி பகுதியில், ஆசிரியர் ஒருவர் பாம்பு தீண்டியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று (11.07.2026) ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
பண்டாரியாவெளியைச் சேர்ந்த 54 வயதுடைய, நான்கு பிள்ளைகளின் தந்தையான ஆசிரியரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது.
நேற்று சனிக்கிழமை தனது வீட்டில் இருந்து வயல் அறுவடை வேலைகளுக்காக அவர் சென்றிருந்தபோது, அங்கிருந்த பாம்பு ஒன்று அவரைத் தீண்டியுள்ளது.
அதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக மகிழடித்தீவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பின்னர் மேலதிக அவசர சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று (12.07.2026) ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிரேத பரிசோதனைகள் நிறைவடைந்த பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
இச்சம்பவம் குறித்து கொக்கட்டிசோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.