கதிர்காம கந்தனை தரிசிப்பதற்காக உகந்தை முருகன் ஆலயத்திலிருந்து காட்டு வழியே பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள், பாதுகாப்பு கணக்கெடுப்பு நடைமுறைகளில் ஏற்படும் தாமதம் காரணமாக கடும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
பக்தர்களின் பாதுகாப்பைக் கருதி கடந்த சில வருடங்களாகவே பாதுகாப்புப் பிரிவினரால் இந்த கணக்கெடுப்பு முறை பின்பற்றப்பட்டு வருகின்றது.
தற்போதைய நடைமுறையின்படி, காலை 6.00 மணி முதல் மாலை 3.00 மணி வரையான காலப்பகுதியிலேயே ஒரு பகுதியில் இருந்து மறு பகுதிக்கு வனத்தினூடாக செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
நீண்ட வரிசையில் தவித்த 3000-க்கும் மேற்பட்ட பக்தர்கள்
கடந்த (10.07.2026)ஆம் திகதி அன்று ஆரம்பமான பாதயாத்திரையின் போது, உகந்தை முருகன் ஆலயத்திலிருந்து குமுக்கன் அம்மன் ஆலயத்தை வந்தடைந்த பக்தர்கள் அன்றைய தினம் அங்கு தங்கியிருந்தனர்.
அடுத்த நாள் காலை (ஜூலை 11, 12 ஆகிய தேதிகளில்) குமுக்கன் ஆலயத்திலிருந்து தமது யாத்திரையைத் தொடர அவர்கள் ஆயத்தமாகினர்.
காலை 6.00 மணிக்கு வனப்பகுதி திறக்கப்படும் என்பதால், அதிகாலை 4.00 மணி முதலே பக்தர்கள் தங்களது சுமைப் பொதிகளுடன் காத்திருக்கத் தொடங்கினர்.
எனினும், காலை 6.00 மணிக்கே கணக்கெடுப்பு பணிகள் ஆரம்பமாகின. அங்கு 3,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டிருந்தமையால், அனைவரையும் கணக்கெடுத்து அனுப்பப் பல மணிநேரம் எடுத்தது.
இதனால் முதியவர்கள், சிறுவர்கள் உட்படப் பலரும் நீண்ட நேரமாக காட்டில் நின்றபடி கடும் சிரமங்களுக்கு உள்ளாகினர்.
முன்வைக்கப்படும் கோரிக்கைகளும் தீர்வுகளும்.
இவ்வாறான அசௌகரியங்கள் எதிர்வரும் நாட்களிலும், அடுத்த வருடங்களிலும் ஏற்படுவதைத் தவிர்க்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முன்கூட்டியே கணக்கெடுப்பைத் தொடங்குதல்.
காலை 6.00 மணிக்கு பாதையைத் திறப்பதற்கு முன்பாகவே, அதாவது அதிகாலை 4.00 மணி முதலே கணக்கெடுப்புப் பணிகளைத் தொடங்க வேண்டும். இதன் மூலம் காலை 6.00 மணி ஆனவுடன் பக்தர்கள் எந்தவித தாமதமுமின்றி உடனடியாகப் பயணத்தைத் தொடர முடியும்.
அதிகாரிகளின் ஒருங்கிணைப்பு.
பொறுப்பு வாய்ந்த அம்பாறை மாவட்ட அரச அதிகாரிகள், பாதயாத்திரை தொடர்பான சமூக மட்ட அமைப்புகள் மற்றும் பாதுகாப்புப் பிரிவினர் இணைந்து இது குறித்து அவசரக் கலந்துரையாடல்களை நடத்தி, சிறந்ததொரு தீர்மானத்தை எட்ட வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.