ஆறு தலைமுறைகளைக் கண்ட இசைக்குயில் எஸ். ஜானகி அம்மா காலமானார்.!

இந்தியத் திரை உலகின் முன்னணி மற்றும் பழம்பெரும் பின்னணிப் பாடகியான 'ஜானகி அம்மா' என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் எஸ். ஜானகி அவர்கள், தனது 88 ஆவது வயதில் இன்று (11.07.2026)ஆம் திகதி காலமானார். 

அவரது மறைவு இந்தியத் திரையுலகினரிடமும், கோடிக்கணக்கான இசை ரசிகர்களிடமும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

​ஆறு தலைமுறை கண்ட இசைப் பயணம்.

​1938 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி பிறந்த எஸ். ஜானகி அவர்கள், 1957 ஆம் ஆண்டு வெளியான 'விதியின் விளையாட்டு' என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் தனது திரையிசைப் பயணத்தைத் தொடங்கினார்.

அன்று முதல் இன்று வரை, கடந்த ஆறு தலைமுறைகளாகத் தனது காந்தக் குரலால் ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகையும் கட்டிப்போட்ட பெருமை இவருக்கு உண்டு.

​இந்தியாவின் மிகச் சிறந்த மற்றும் பிரபலமான பின்னணிப் பாடகிகளில் ஒருவரான இவர், மொழிகளின் எல்லைகளைக் கடந்து சாதனை படைத்தவர்.

திரைப்படங்கள், ஆவணப்படங்கள், தொலைக்காட்சி மற்றும் வானொலி எனப் பல்வேறு தளங்களில் 50,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பதிவு செய்துள்ளார்.

​தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, ஒடியா, பெங்காலி உள்ளிட்ட 17 இந்திய மொழிகளில் தனிப்பாடல்களைப் பாடியுள்ளார்.

​இவர் இந்திய அளவில் பல மொழிகளில் நாற்பதாயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடியிருந்தாலும், இவரது இசை வாழ்க்கையில் மிக அதிக எண்ணிக்கையிலான பாடல்கள் கன்னட மொழியிலேயே இடம்பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

​மராத்தி, துளு, உருது, குஜராத்தி, அசாமி, சிந்தி, பஞ்சாபி, கொங்கனி ஆகிய இந்திய மொழிகள் மட்டுமின்றி... ஆங்கிலம், ஜப்பானிய, அரபு, ஜெர்மன் மற்றும் சிங்களம் போன்ற உலக மொழிகளிலும் பாடி அசத்தியுள்ளார்.

​இவரது அசாத்தியப் பாடும் திறமைக்காகவும், குரல் இனிமைக்காகவும் இந்திய அரசின் உயரிய விருதான தேசிய விருதை நான்கு முறை வென்றுள்ளார். 

பாடகர் என்பதைத் தாண்டி, பல பாடல்களைத் தானே எழுதி, இசையமைத்துப் பாடிய பன்முகத்திறமை கொண்டவர் ஜானகி அம்மா.
திரையுலகில் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கி, கோடிக்கணக்கான இதயங்களை ஆராதித்த ஜானகி அம்மாவின் மறைவு, இந்திய இசை உலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

அவரது மறைவிற்குத் திரை உலக பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
புதியது பழையவை