இலங்கையின் மருத்துவ வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, ஒட்டிப் பிறந்த இரட்டையர்களை வெற்றிகரமாகப் பிரிக்கும் மிகச் சிக்கலான, அரிய அறுவை சிகிச்சையை பேராதனை மருத்துவக் குழுவினர் வெற்றிகரமாக மேற்கொண்டு வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.
பேராதனை போதனா வைத்தியசாலை, சிறிமாவோ பண்டாரநாயக்க விசேட குழந்தைகள் வைத்தியசாலை மற்றும் பேராதனை பல்கலைக்கழக மருத்துவ பீடம் ஆகியவற்றின் நிபுணத்துவ மருத்துவக் குழுவினர் இணைந்து, கடந்த (10.07.2026)ஆம் திகதி இந்த அதிநவீன அறுவை சிகிச்சையை முன்னெடுத்திருந்தனர்.
மாவனெல்லை, அரநாயக்க பகுதியைச் சேர்ந்த லினுலி தருல்யா மற்றும் லித்துலி மனுல்யா ஆகிய ஒட்டிப் பிறந்த இரட்டையர்களே இவ்வாறு வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2021ஆம் ஆண்டு பிறந்த இந்த இரட்டைக் குழந்தைகள், கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக சிறப்பு மருத்துவ நிபுணர்களின் தீவிர மற்றும் தொடர்ச்சியான கண்காணிப்பில் இருந்து வந்தனர்.
இந்த அறுவை சிகிச்சையை மேற்கொள்வதற்கு முன்னர், குழந்தைகளுக்கு விரிவான மருத்துவ பரிசோதனைகள், பல கட்ட திட்டமிடல்கள் மற்றும் பிரத்யேக சிறப்பு சிகிச்சை நடைமுறைகள் மிகவும் துல்லியமான முறையில் மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சைகளில் மிகவும் சிக்கலான மற்றும் சவாலான ஒன்றாகக் கருதப்படும் இந்த சிகிச்சை, முழு நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளது. அத்துடன், இலங்கை மருத்துவ நிபுணர்களின் அசாத்திய திறமை, அர்ப்பணிப்பு மற்றும் தொழில்முறை நிபுணத்துவத்திற்கு உலகளாவிய ரீதியில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.