இலங்கை அரசின் உள்ளக நீதிப்பொறிமுறையை முற்றாக நிராகரித்து, தங்களுக்குப் பின்னால் உள்ள உண்மைகளையும் நீதியையும் கண்டறிய சர்வதேச விசாரணையே ஒரே வழி என்பதை வலியுறுத்தி மட்டக்களப்பில் இன்று (04.07.2026) ஆம் திகதி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நடைபெற்றது.
இப்போராட்டத்தை மட்டக்களப்பு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.
"உள்ளக நீதி வேண்டாம்" – உறவுகளின் முழக்கம்.
போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தங்களின் நியாயமான கோரிக்கைகளை உரத்த குரலில் வலியுறுத்தினர்.
குறிப்பாக, "உள்ளக நீதிப்பொறிமுறை எமக்கு வேண்டாம் – சர்வதேச விசாரணையை கோருகின்றோம்" என்ற பிரதான முழக்கத்தை முன்வைத்துப் போராடினர்.
காலம் காலமாக இழுத்தடிக்கப்படும் உள்ளக பொறிமுறைகள் தங்களுக்கு ஒருபோதும் நீதியைப் பெற்றுத்தராது என்பதை அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
இப்போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. ஶ்ரீநேசன் அவர்கள் நேரில் கலந்துகொண்டு தனது பலத்த ஆதரவை வெளிப்படுத்தினார்.
காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உண்மை மற்றும் நீதியை நிலைநாட்டக் கோரி நடத்தும் இந்தப் போராட்டத்தின் நியாயத்தன்மையை ஏற்றுக்கொண்ட அவர், அவர்களது கோரிக்கைகளுக்குத் தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்தார்.
இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில், காணாமலாக்கப்பட்டோரின் வயோதிபப் பெற்றோர், மனைவிகள், பிள்ளைகள் என அவர்களது உறவினர்கள் கண்ணீருடனும் ஆதங்கத்துடனும் பெருந்திரளாகப் பங்கெடுத்தனர். இவர்களுடன் இணைந்து சமூக ஆர்வலர்கள் மற்றும் ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு, பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளை சர்வதேச சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் வகையில் தங்களது குரல்களைப் பதிவு செய்தனர்.