யாழ்ப்பாணம் அச்சுவேலியைச் சேர்ந்தவரும், தற்போது மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுபவருமான கம்சன் எனும் பொலிஸ் உத்தியோகத்தர், தனது மனைவியுடன் தவறான முறையில் பழகுவதற்கு முயற்சிப்பதாகக் கூறி மட்டக்களப்பைச் சேர்ந்த இராஜகுலசிங்கம் சந்திரகுமார் என்பவர் பகிரங்கக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர், ஊடகங்கள் மற்றும் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவரும் வகையில் மரண வாக்குமூல வடிவிலான உருக்கமான அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
பொலிஸ் உயர் அதிகாரிகளிடம் முறைப்பாடு.!
குறித்த பொலிஸ் உத்தியோகத்தரின் செயல்பாடுகள் குறித்து, பாதிக்கப்பட்ட நபர் பலமுறை அவரிடம் எச்சரித்துள்ளதோடு, கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி (29.04.2026) பிரதிப் பொலிஸ் மா அதிபரிடமும் (DIG), நேற்று (03.07.2026) ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடமும் உத்தியோகபூர்வமாக முறைப்பாடுகளை அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அச்சுறுத்தல்களும் மன உளைச்சலும்.!
தனக்கு எதிராக ஏதேனும் சட்ட நடவடிக்கை எடுத்தால், போலியான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி நிரந்தரமாக சிறைக்கு அனுப்புவதாக அந்த பொலிஸ் உத்தியோகத்தர் தன்னை அச்சுறுத்தி வருவதாக சந்திரகுமார் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தொடர் அச்சுறுத்தல்கள் காரணமாக தானும் தனது குடும்பமும் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகவும், ஏற்கனவே இருமுறை தற்கொலைக்கு முயன்றதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தச் சர்ச்சையினால் தனது பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்பட்டு அவர்கள் பாடசாலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், சமூகத்தில் தங்களுக்கு வீண்பழி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள இறுதி வேண்டுகோள்..!
"ஒரு பொலிஸ் உத்தியோகத்தரை எதிர்த்து நிற்பதற்கு என்னிடம் அரசியல் செல்வாக்கோ அல்லது பணபலமோ இல்லை.
இவரது அத்துமீறல்கள் மேலும் தொடருமாயின், நான் எனது குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை. அவ்வாறு ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால், சுயநினைவோடு நான் எழுதும் இந்த அறிக்கையே எனது மரண வாக்குமூலமாகும்" என அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
தான் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளில் ஏதேனும் பொய்மை இருக்குமாயின், இலங்கை பொலிஸ் திணைக்களம் தன் மீது சட்ட நடவடிக்கை எடுக்கலாம் எனவும், தனக்கு நேர்ந்த இந்த அவலநிலைக்கு உரிய அதிகாரிகள் உடனடியாக நியாயமான தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.