மட்டக்களப்பு போரதீவுப் பற்று கல்விக்கோட்டத்திற்குட்பட்ட பின்தங்கிய எல்லைப் பிரதேசப் பாடசாலைகளின் ஆவணங்களைச் சிறந்த முறையில் பாதுகாத்து வைப்பதற்காக, எருவில் கல்வி சமூக அபிவிருத்தி ஒன்றியத்தினால் (ESDA) நேற்று (15.07.2026) ஆம் திகதி ஆவணக் கோப்புகள் (Files) வழங்கி வைக்கப்பட்டன.
மட்டக்களப்பு எருவில் கல்வி சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் (ESDA) ஸ்தாபகரும், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் உப தவிசாளருமான அ.வசிகரன் அவர்களின் சொந்த நிதியுதவியின் மூலம் இவ் ஆவணக் கோப்புகள் கொள்வனவு செய்யப்பட்டு, பாடசாலைகளிடம் கையளிக்கப்பட்டன.
போரதீவுப்பற்று பிரதேச சபையின் பாலையடிவட்டை வட்டாரப் பிரிவில் உள்ள பின்தங்கிய எல்லைக் கிராமப் பாடசாலைகளான 37ஆம் கிராமம் புதுமுன்மாரிச்சோலை சக்தி வித்தியாலயம், மண்டூர் 35ஆம் கிராமம் கண்ணன் வித்தியாலயம் மற்றும் விழாந்தோட்டம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை ஆகிய மூன்று பாடசாலைகளின் ஆவணப் பாதுகாப்புத் தேவையைக் கருத்திற்கொண்டு, போரதீவுப்பற்று பிரதேச சபையின் உப தவிசாளர் த.கயசீலன் அவர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாகவே இவ்வுதவிகள் எருவில் கல்வி சமூக அபிவிருத்தி ஒன்றியத்தினால் உடனடியாக ஏற்பாடு செய்து வழங்கப்பட்டன.
இன்றைய தினம் இடம்பெற்ற இந்நிகழ்வின் போது, போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் விமலநாதன் மதிமேனன் அவர்கள் கலந்துகொண்டு, மூன்று பாடசாலைகளினதும் அதிபர்களிடம் இந்த ஆவணப் பாதுகாப்புக் கோப்புகளை உத்தியோகபூர்வமாகக் கையளித்தார்.
இந்நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் உறுப்பினர்கள், எருவில் கல்வி சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் (ESDA) நிர்வாகத்தினர் மற்றும் பாடசாலைகளின் அதிபர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் உள்ள பின்தங்கிய பாடசாலைகளைத் தொடர்ச்சியாக இனங்கண்டு, கல்வி மேம்பாட்டிற்காக எருவில் கல்வி சமூக அபிவிருத்தி ஒன்றியமானது (ESDA) ஆற்றிவரும் இத்தகைய மகத்தான சேவைகளுக்குப் பாடசாலை சமூகத்தினரும், கிராமப் பொதுமக்களும் தங்களது மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.