இடைநடுவில் நிறுத்தப்பட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்த கருத்துக்களால் ஏற்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்து, கூட்டம் இடைநடுவில் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் திறன் விருத்தி மண்டபத்தில் இன்று (16.07.2026) நடைபெற்ற இந்தக் கூட்டம், கடற்றொழில் அமைச்சர் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் இடம்பெற்றது.

கூட்டத்தின் போது, திருவையாறு பகுதியில் லால் காந்தவால் மேற்கொள்ளப்பட்ட தென்னை செய்கை விநியோகத்தில் மோசடி இடம்பெற்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதம் தீவிரமடைந்த நிலையில், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரும் இந்த விடயத்தில் உடந்தையாக செயற்படுவதாக அர்ச்சுனா குற்றஞ்சாட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது இடம்பெற்ற கருத்து மோதலையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கூட்டத்திலிருந்து வெளியேறியுள்ளார்.

தொடர்ந்து பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தவிசாளர்களுக்கு இடையிலும் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதேச செயலாளர்கள் கூட்டத்திலிருந்து வெளியேறியதுடன், பின்னர் அரச திணைக்கள அதிகாரிகளும் ஒன்றன்பின் ஒன்றாக வெளியேறியுள்ளனர்.

இதன் காரணமாக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக, கூட்டம் வழமையான முறையில் ஆரம்பிக்கப்பட்டிருந்ததுடன், இந்த ஆண்டில் கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள மத்திய மற்றும் மாகாண அரசாங்க அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் அதிகாரிகளால் விளக்கமளிக்கப்பட்டிருந்தது.

இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், க.இளங்குமரன், இராமநாதன் அர்ச்சுனா உள்ளிட்டோர், காவல்துறையினர், கடற்படையினர், இராணுவத்தினர், அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் பல்வேறு துறைசார் அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.

புதியது பழையவை