இலங்கையின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான பெந்தொட்டையில், வான்வழிச் சவாரியின் போது பராமோட்டார் (Paramotor) இயந்திரக் கோளாறு காரணமாக கடலில் வீழ்ந்து லெபனான் நாட்டைச் சேர்ந்த பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று(29.07.2026)ஆம் திகதி பிற்பகல் 4.00 மணியளவில் பெந்தொட்டை கடற்கரையிலிருந்து சுமார் 700 மீற்றர் தொலைவில் இடம்பெற்றுள்ளது.
விபத்து நேர்ந்தது எப்படி?
பெந்தொட்டை வான்பரப்பில் பறந்தவாறு அப்பகுதியின் அழகை ரசிப்பதற்காகவே லெபனான் நாட்டைச் சேர்ந்த பெண் பயணி பராமோட்டார் சவாரியை மேற்கொண்டுள்ளார்.
எனினும், நடுவானில் பறந்துகொண்டிருந்த போது பராமோட்டாரில் எதிர்பாராதவிதமாக திடீர் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த பராமோட்டார் கடலில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
கடற்படையினரால் சடலம் மீட்பு..!
பராமோட்டாரைச் செலுத்திய கொலம்பிய நாட்டு விமானி (Pilot), விபத்து ஏற்பட்ட தருணத்தில் கடலில் குதித்து நீந்தி உயிர் தப்பியுள்ளார்.
எனினும், பராமோட்டாருடன் கடலில் மூழ்கி காணாமல் போன லெபனான் நாட்டுப் பெண்ணைத் தேடும் பணியில் இலங்கை கடற்படையின் நீச்சல் வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.
தொடர் தேடுதல் நடவடிக்கையின் பலனாக அப்பெண்ணின் சடலம் கடற்படையினரால் மீட்கப்பட்டது.
பொலிஸ் விசாரணை ஆரம்பம்.
மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் தற்போது உடற்கூறாய்வு பரிசோதனைகளுக்காக களுத்துறை – நாகொட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பெந்தொட்டை பொலிஸார் வழக்குப்பதிவு செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சுற்றுலாத் தலமொன்றில் இடம்பெற்ற இந்தச் சோகச் சம்பவம் பயணிகள் மத்தியிலும் உள்ளூர் மக்களிடையேயும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.