தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் - இரு சிங்கக் குட்டிகளுக்கு பெயர் சூட்டல்!

இலங்கையின் தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் பிறந்த இரண்டு சிங்கக் குட்டிகளுக்கு, அதன் 90ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நேற்று (03.07.2026) ஆம் திகதி உத்தியோகபூர்வமாகப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

​கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி பிறந்த இந்த சிங்கக் குட்டிகளைப் பொதுமக்கள் பார்வையிடுவதற்கும், அவற்றுக்குப் பெயர் சூட்டுவதற்குமான விசேட வாய்ப்பு கடந்த ஜூன் மாதம் 21 ஆம் திகதிவரை வழங்கப்பட்டிருந்தது. 
மிருகக்காட்சிசாலை மைதானத்தில் துள்ளிக்குதித்து விளையாடிய இக்குட்டிகளைப் பார்வையிட்ட பொதுமக்கள், அங்கிருந்த விசேட பெட்டியில் தாங்கள் விரும்பிய பெயர்களைப் பரிந்துரைத்து இட்டிருந்தனர்.

​இந்நிலையில், நேற்று நடைபெற்ற மிருகக்காட்சிசாலையின் 90ஆவது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் முக்கிய நிகழ்வாக இந்த பெயர் சூட்டும் விழா அமைந்தது.

பொதுமக்களால் பரிந்துரைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பெயர்களிலிருந்து இரண்டு சிறந்த பெயர்கள் இதன்போது தெரிவு செய்யப்பட்டன.

​இதன்படி, ஆண் சிங்கக் குட்டிக்கு 'கெய்ரோ' (Cairo) என்றும், பெண் சிங்கக் குட்டிக்கு 'ஸோரா' (Zora) என்றும் பெயரிடப்பட்டுள்ளது.

​ஆண் குட்டிக்கு 'Cairo' என்ற பெயரைப் பரிந்துரைத்த தெஹிவளையைச் சேர்ந்த ஆன்டிரிஷா (Anne Trisha) மற்றும் பெண் குட்டிக்கு 'Zora' என்ற பெயரைப் பரிந்துரைத்த மினுவாங்கொடவைச் சேர்ந்த ஜெரூஷா மனவாடுகே (Yerusha Manawaduge) ஆகியோரின் தெரிவுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அவர்கள் இருவருக்கும் விழாவில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்களால் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
புதியது பழையவை