பாராளுமன்றத்தில் மக்கள் ஆணையைக்கொண்டுள்ள மலையகம் மற்றும் வட கிழக்கைப் பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் கூட்டு, இனவாத அடிப்படையிலானதல்ல என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இன்று (13.07.2026) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத்தெரிவித்தார்.
இக்கூட்டணி குறித்து அண்மைக்காலமாக எழுப்பப்பட்டு வரும் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் அவர் இந்த விளக்கத்தை அளித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
"பேரினவாதத்திற்கெதிராகச்செயற்படுவது குறித்து நண்பர் சுமந்திரன் விவரித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக, கடந்த சில தினங்களாக இக்கூட்டு குறித்து அங்காங்கே எழுந்துள்ள ஒரு முக்கிய விமர்சனத்திற்கு நான் விளக்கமளிக்க விரும்புகிறேன்.
இக்கூட்டானது 'இனவாத அடிப்படையிலானது' என்றவாறு முன்வைக்கப்படும் விமர்சனங்களில் எவ்வித உண்மையுமில்லை.
தமிழ் பேசும் சமூகங்களைப்பிரதிநிதித்துவப்படுத்தி மக்கள் ஆணையோடு பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஆறு பிரதான கட்சிகளின் ஒருங்கிணைப்பாகவே இது உருவாக்கப்பட்டுள்ளது.
நாட்டினுடைய இறைமை, சட்டத்தின் ஆட்சிக்கு விடுக்கப்படும் சவால்கள், மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றைப்பாதுகாப்பது போன்ற பொதுவான கோட்பாடுகளை முன்னிறுத்தியே இப்பாராளுமன்றக் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன.
தேர்தல் காலங்களிலும் ஏனைய பொதுவான காலகட்டங்களிலும் சிறுபான்மைச்சமூகங்கள் எதிர்கொள்கின்ற சவால்களுக்கு கூட்டுச் செயற்பாடுகள் மூலம் முறையான தீர்வுகளைக் காண்பதே எங்களது முதன்மை நோக்கமாகும்.
நாட்டின் பொதுவான குறிக்கோள்களுக்கமைவாகச் செயற்பட்டு எங்களுடைய சமூகங்களின் விடிவை நோக்கிய நியாயமான தீர்வுகளைப் பெற்றுக்கொள்வதே இவ்வொருங்கிணைப்பின் அடிப்படை எதிர்பார்ப்பாகும் என ரவூப் ஹக்கீம் மேலும் குறிப்பிட்டார்.
தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் கூட்டில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஜனநாயக தமிழ் தேசியக்கூட்டமைப்பு, இலங்கை தமிழரசுக்கட்சி மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டமைப்பு
என பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 6 பிரதான தமிழ், முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன.