மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட சின்னவத்தை கிராமத்தில் அமைந்துள்ள, மூன்று கிராமங்களுக்குரிய பொது மயானத்தில் மக்களின் நீண்டகாலத் தேவையான அஞ்சலிபீடம் ஒன்றினை அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு (08.07.2026) ஆம் திகதி நடைபெற்றது.
ஆனைகட்டியவெளி, நெடியவட்டை, சின்னவத்தை ஆகிய மூன்று கிராமத்து மக்களும் கூட்டாகப் பயன்படுத்தும் இந்த பொது மயானத்தில், சின்னவத்தை வட்டார உறுப்பினர் காத்தமுத்து- யோகராசா அவர்களின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடைபெற்றது.
இதில் போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் விமலநாதன் மதிமேனன் அவர்கள் முதன்மை அதிதியாகக் கலந்துகொண்டு அஞ்சலிபீடத்திற்கான அடிக்கல்லினை நட்டு, பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, பிரதேச சபையின் உபதவிசாளர் தங்கராசா- கயசீலன், வெல்லாவெளி வட்டார உறுப்பினர் வரதராஜா, கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் அடுத்தடுத்து அடிக்கற்களை நாட்டி வைத்தனர்.
அடிக்கல் நாட்டு நிகழ்வினைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றிய தவிசாளர் விமலநாதன் மதிமேனன் பின்வருமாறு குறிப்பிட்டார்.
"நமது இறந்த ஆத்மாவானது இறுதியில் உறங்கும் இடத்தினைத் தூய்மையாக வைத்து வழிபடும் இடம்தான் இந்த அஞ்சலிபீடமாகும்.
அத்தகைய புனிதமான இந்த அஞ்சலிபீடப் பணியானது, 2 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் மூலம் மிகவும் நேர்த்தியாகச் செய்யப்படவுள்ளது."
"போரதீவுப்பற்று பிரதேச சபையின் 2026ஆம் ஆண்டுக்கான சபை நிதியில் இருந்து, சபைக்குட்பட்ட 10 வட்டாரங்களுக்கும் மொத்தமாக 2 கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டு, ஒவ்வொரு வட்டாரத்திற்குரிய அபிவிருத்தி வேலைகளும் தற்போது மிகச் சிறப்பாகச் செய்யப்பட்டு வருகின்றன."
"இந்த சபையானது இலங்கை தமிழரசுக்கட்சியின் ஆட்சியின் கீழ் உள்ளதனால், நாம் எப்பொழுதும் மக்களின் நலனை மட்டுமே முதன்மையாகக் கொண்டுள்ளோம்.
அரசியல் தடைகள் பல இருந்தாலும், எமது கட்சியின் கீழ் மக்களுக்காகத் தொடர்ந்து அனைத்து உள்கட்டமைப்பு மற்றும் அபிவிருத்தி வேலைகளையும் நாங்கள் அர்ப்பணிப்புடன் செய்வோம்."
"மயான உட்கட்டமைப்பு மட்டுமன்றி, இப்பகுதி மக்கள் எதிர்கொள்ளும் ஏனைய அடிப்படைப் பிரச்சினைகளான குடிநீர் தட்டுப்பாடு மற்றும் தெருவிளக்கு வசதிகள் போன்றவற்றை நாங்கள் நன்கு அறிவோம்.
இவற்றுக்கான தீர்வுகளையும் கட்டம் கட்டமாக நாங்கள் மக்களுக்குச் செய்து கொடுப்போம் என உறுதியளிக்கிறேன்."
"இக்கிராமங்களைச் சேர்ந்த சில இளைஞர்கள் சமூக வலைத்தளமான முகப்புத்தகத்தில் (Facebook) 'கிராமத்திற்கு ஒன்றும் செய்யவில்லை' என எழுதுகின்றார்கள்.
ஆனால், உண்மையில் இந்த சின்னவத்தை வட்டாரத்தில் தற்போது பாரிய அபிவிருத்தி வேலைகள் இடம்பெற்று வருகின்றன என்பதை அவர்கள் நேரில் பார்த்துப் புரிந்துகொள்ள வேண்டும்."
"இன்றும் கூட இப்பகுதி மக்களின் வளர்ச்சிக்காகப் பல நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
எனவே, விமர்சிப்பவர்கள் தள்ளி நின்று பேசாமல், எங்களுடன் இணைந்து வாருங்கள் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து நமது கிராமங்களை முன்னேற்றுவோம்."
ஆனைகட்டியவெளி, நெடியவட்டை, சின்னவத்தை ஆகிய கிராமங்களின் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்ட இந்நிகழ்வில், தங்களின் நீண்டகால ஆன்மீக மற்றும் சமூகக் கோரிக்கையை நிறைவேற்ற உழைத்த வட்டார உறுப்பினருக்கும், இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைமைத்துவத்தின் கீழான பிரதேச சபைக்கும் பொதுமக்கள் தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.