கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகரை நோக்கிப் புறப்பட்ட பயணிகள் விமானம் ஒன்றுடன் பறவை மோதியதால், வான்பரப்பில் சில மணிநேரம் வட்டமிட்ட விமானம் தற்போது பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.
இன்று சனிக்கிழமை (11.07.2026)ஆம் திகதி காலை கட்டுநாயக்கவிலிருந்து இஸ்தான்புல் நோக்கிப் புறப்பட்ட 'A330' ரக பயணிகள் விமானம் ஒன்றே இவ்வாறு பறவை மோதலுக்கு உள்ளாகியுள்ளது.
பறவை மோதியதைத் தொடர்ந்து ஏற்பட்ட அவசர நிலைமை காரணமாக, விமானத்தை உடனடியாக மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்திலேயே தரையிறக்க தீர்மானிக்கப்பட்டது.
எனினும், விமானத்தின் அதிக எடை காரணமாக உடனடியாக தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பாதுகாப்பாகத் தரையிறங்குவதற்காக விமானத்தின் எடையைக் குறைக்கும் நோக்கில், சிலாபம் வான்பரப்பில் மிகக் குறைந்த உயரத்தில் வட்டமிட்டவாறு விமானத்தின் எரிபொருளைக் குறைக்கும் (Fuel dumping) நடவடிக்கையில் விமானி ஈடுபட்டார்.
பறவை மோதிய அவசர நிலையிலும், வான்பரப்பில் வட்டமிட்டு எடையைக் குறைத்த பின்னர், குறித்த பயணிகள் விமானம் தற்போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் எவ்வித ஆபத்துகளுமின்றி பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.