இலங்கையில் எல்நினோ காலநிலை மாற்றம் காரணமாக எதிர்வரும் மாதங்களில் மிகக் கடுமையான வரட்சி ஏற்படும் என எதிர்வுகூறப்படும் நிலையில் மட்டக்களப்பு செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச மக்களுக்கான வரட்சி நிவாரண குடிநீருக்கான நிதியை நிறுத்தியது ஏன் என ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் செ. நிலாந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நேற்று முன்தினம் (16.07.2026)ஆம் திகதி நடைபெற்ற செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச சபையின் 14 வது சபை அமர்வில் ஒவ்வொரு அரசாங்கத்திலும் வருடா வருடம் வழங்கப்பட்டு வந்த வரட்சி நிவாரண நிதியை சுற்று நிருபம் ஒன்றின் ஊடக அரசாங்கம் நிறுத்தி உள்ள நிலையில் பிரதேச சபை நிதி ஊடாக நிதி வழங்குவது தொடர்பான அனுமதி வழங்கும் விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து பேசுகையில்
இலங்கையில் எல்நினோ காலநிலை மாற்றம் காரணமாக எதிர்வரும் மாதங்களில் மிகக் கடுமையான வரட்சி ஏற்படும் என எதிர்வுகூறப்படும் நிலையில் மட்டக்களப்பு செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச சபை பிரிவில் குடிநீர் இன்றி தவிக்கும் மக்களுகு குடிநீர் வழங்குவதற்காக பிரதேச செயலகம் ஊடாக வருடா வருடம் வழங்கப்படும் வரட்சி நிவாரண குடிநீர் நிதியை நிறுத்தியுள்ளனர்.
வருடா வருடம் ஏற்படும் வரட்சி காரணமாக மிக மோசமான பாதிப்புக்கு உள்ளாகும் பிரதேசங்களில் ஏறாவூர் பற்று பிரதேச சபையும் முக்கியமானது.
ஏறாவூர் பற்று பிரதேச சபை பிரிவில் உள்ள பதுளை வீதியில் உள்ள கிராமங்களில் மிக கடுமையான வரட்சியால் அந்த பகுதி மக்கள் குடிநீர் இன்றி மிக மோசமாக பாதிக்கப்படுகின்றனர்.
அந்த மக்களின் குடிநீர் தேவையை அரசாங்கத்தால் இன்று வரை தீர்க்க முடியாமல் உள்ளது.
இன் நிலையில் செங்கலடி பிரதேச செயலகம் ஊடாக வருடா வருடம் பிரதேச சபைக்கு வழங்கப்பட்டு வந்த வரட்சி நிவாரண குடி நீர் நிதியை நிறுத்தி உள்ளனர்.
எதிர்வரும் மாதங்களில் எல்நினோ காலநிலை மாற்றம் காரணமாக இலங்கை முழுவதும் வரட்சி ஏற்படும் என எதிர்வுகூறப்படும் நிலையில் அதற்கு தயாராகுமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸ்ஸாநாயக்க அவர்கள் தெரிவித்துள்ளார் .
அண்மையில் கொழும்பில் நடைபெற்ற கூட்டத்தில் எல்நினோ காலநிலையால் ஏற்படும் வரட்சி நிலையை கருத்தில் கொண்டு குடிநீருக்கு வழங்கப்பட்டு வரும் நிதியை அதிகரிக்க வேண்டும் என கூறியிருந்தார்.
ஆனால் இங்கு வருடா வருடம் வழங்கப்பட்டு வந்த வரட்சி நிவாரண குடிநீருக்கான நிதியை சுற்று நிரூபம் ஒன்றின் அடிப்படையில் நிறுத்துவதாக செங்கலடி பிரதேச செயலகம் அறிவித்துள்ளது.
மக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீருக்கான நிதியை நிறுத்தியது மிகவும் கண்டிக்க தக்க செயல் அதுவும் ஏறாவூர் பற்று பிரதேச சபை பிரிவில் உள்ள பதுளை வீதியில் உள்ள கிராமங்களில் வாழும் மக்கள் வருடா வருடம் மிக மோசமான வரட்சியால் பாதிக்கப்பட்டு குடிநீருக்காக அவதிப்பட்டு வரும் நிலையில் அதற்கான நிதியை நிறுத்தியது மனிதாபிமானமற்ற செயல்.
இந்த மோசமான செயலை இதுவரை வேறு எந்த அரசும் செய்யவில்லை.
இவ்வாறான செயலை செய்ய யார் காரணம்?
அரசாங்கம் காரணமா? அல்லது அதிகாரிகள் காரணமா? இதற்கான அடிப்படை காரணம் என்ன என்பதை தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் சபைக்கு தெரிவிக்க வேண்டும்.
அத்துடன் நிறுத்தப்பட்ட நிதியை உடனடியாக மீள வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
இதேவேளை அரசாங்கம் என்னதான் எமது மக்களுக்கான குடிநீருக்கான நிதியை நிறுத்தினாலும் பிரதேச சபை ஊடாக தொடர்ச்சியாக அந்த மக்களுக்கான குடிநீர் வழங்கப்படும் என ஏறாவூர் பற்று பிரதேச சபை தவிசாளர் மு. முரளிதரன் தெரிவித்தார்.