மட்டக்களப்பு போரதீவுப்பற்றில் சைவநெறி கழகத்தின் கல்வி மற்றும் அறநெறித் திட்டங்கள் - சித்த ஆயுர்வேத வைத்தியர் ஆர். சிறி கிருஷ்ணன் தலைமையில் அங்குரார்ப்பணம்!

​சைவநெறி கழகமானது மாணவர்களின் ஆன்மீக, விளிமிய மற்றும் மனித மேம்பாட்டுக் கல்வியை வளர்க்கும் நோக்கில் பல்வேறு சமூகப் பணிகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.

இக்கழகத்தோடு இணைந்து, 'சைவப்பெரியார் சூரன் பெருமானாரின் கல்வி செயல்பாட்டுக் குழு' மற்றும் 'அருணாசல தேசிகர் அறநெறி செயல்பாட்டுக் குழு' ஆகிய மூன்று அமைப்புகளும் ஒன்றிணைந்து இச்சேவைகளை வழங்கி வருகின்றன.

இலங்கை சைவநெறி கழகத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளரும், மட்/ பட் கண்ணகிபுரம் விநாயக வித்தியாலய அதிபரும், இலங்கை தேசிய பாரம்பரிய மற்றும் ஆயுர்வேத பாதுகாப்பு சபையின் தேசிய கல்வி இயக்குநர், தேசிய நல்லிணக்கம் மற்றும் வடக்கு கிழக்கு மாகாண நிர்வாக விவகாரங்கள் பணிப்பாளர், சர்வதேச மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்க அமைப்பின் சர்வதேச பணிப்பாளர் ஆகிய பற்பல பொறுப்புகளை வகிக்கும் சித்த ஆயுர்வேத வைத்தியர் ஆர். சிறி கிருஷ்ணன் அவர்களின் தலைமையில் இத்திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

மாணவர்களின் ஆன்மீக மற்றும் விளிமியப் பண்புகளை மேம்படுத்துவதற்காக, அருணாசல தேசிகர் அறநெறி செயல்பாட்டுக் குழுவினால் ஞாயிற்றுக்கிழமைகளில் அறநெறி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதேவேளை, மாணவர்களின் கல்வித் திறனை ஊக்கவித்து, அவர்களைப் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெறச் செய்யும் நோக்கில், சூரன் பெருமானாரின் கல்வி செயல்பாட்டுக் குழுவினால் தரம் 2, 3, 4, 5 ஆகிய வகுப்புகளுக்கான மேலதிக வகுப்புகள் சனிக்கிழமைகளில் 'சிறுவர் கல்வி மேம்பாட்டுத் திட்டம்' ஊடாக நடத்தப்படுகின்றன.

இத்திட்டத்தின் முதற்கட்டம் கடந்த 27ஆம் தேதி கிழக்கு மாகாணத்தில் முதன்முறையாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. 

இதன்கீழ், மகிழூர் சரஸ்வதி மகா வித்தியாலயம், மகிழூர் முனை சக்தி வித்தியாலயம் மற்றும் கண்ணகிபுரம் விநாயக வித்தியாலயம் ஆகிய மூன்று பாடசாலைகளில் இக்கல்வி மேம்பாட்டுத் திட்டங்கள் வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டன.

​அதனைத் தொடர்ந்து, இத்திட்டத்தின் இரண்டாம் கட்டமாக, கிழக்கு மாகாணத்தில் இரண்டாவதாக போரதீவுப்பற்றுப் பிரதேசத்திற்குட்பட்ட மண்டூர் 35ஆம் கிராமம் கண்ணன் வித்தியாலயத்தில் நேற்று (05.07.2026) ஆம் திகதி இத்திட்டம் உத்தியோகபூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

பட்டிருப்பு வலயக் கல்விப்பணிப்பாளர் சிவானந்தன் சிறிதரன் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக மண்டூர்  35ஆம் கிராமம் கண்ணன், விழாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன்,மற்றும் 37ஆம் கிராமம் புதுமுன்மாரிச்சோலை ஆகிய மூன்று பாடசாலைகளையும் ஒன்றிணைத்த வகையில் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

 இப்பாடசாலைகள் ஒன்றிணைக்கப்பட்டு 'மாணிக்கவாசகர் அறநெறிப் பாடசாலை' எனும் பெயரில் அறநெறி வகுப்புகளும், தரம் 2 முதல் 5 வரையான மாணவர்களுக்கான சிறுவர் கல்வி மேம்பாட்டுத் திட்டமும் வைத்தியர் ஆர். சிறி கிருஷ்ணன் அவர்களின் வழிகாட்டலில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வின் போது சிறப்பு அதிதியாகப் போரதீவுப்பற்று பிரதேச சபையின் உப தவிசாளர் தங்கராசா கயசீலன் அவர்கள் கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் சமுகசெயற்பாட்டாளரும் ஊடகவியளருமாகிய பா.மேனன் மற்றும்  37ஆம் கிராமம் புதுமுன்மாரிச்சோலை பாடசாலை அதிபர், விழாந்தோட்டம் பாடசாலை அதிபர், 35ஆம் கிராமம் கண்ணன் வித்தியாலய அதிபர், ஆசிரியர்கள், விளையாட்டு கழக உறுப்பினர்கள்,பாடசாலை அபிவிருத்தி சங்க நிருவாகத்தினர்,சமுக நலன் விரும்பிகள்  மாணவர்கள் ,பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
புதியது பழையவை