அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பிரதேச சபைக்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் நெல் விற்பனையின் போது இடம்பெறவிருந்த பெரும் தராசு மோசடியை திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் மற்றும் அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு தடுத்து நிறுத்தியுள்ளனர்.
விநாயகபுரம் பகுதியில் விவசாயி ஒருவர் தனது நெல் மூடைகளை விற்பனைக்காக நிறுவை செய்து கொண்டிருந்தபோது, பயன்படுத்தப்பட்ட தராசில் நிறுவை மோசடி செய்யப்படுவதை சந்தேக நபராகக் கண்டறிந்தார். உடனடியாக இது குறித்து திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளருக்கு தொலைபேசி ஊடாகத் தகவல் வழங்கினார்.
தகவல் அறிந்த அடுத்த கணமே, திருக்கோவில் பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் சுந்தரலிங்கம் சசிகுமார், கௌரவ உப தவிசாளர் மற்றும் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கிருந்த தராசின் தரத்தினை பரிசோதனை செய்தபோது, அதில் முறைகேடான மற்றும் பிழையான நிறுவை காட்டப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
பிரதேச சபையின் இந்த உடனடி அதிரடி நடவடிக்கையால், சம்பந்தப்பட்ட விவசாயிக்கு ஏற்படவிருந்த சுமார் ரூ. 2,50,000 (2.5 லட்சம் ரூபாய்) அளவிலான பெரும் நிதி இழப்பு தடுத்து நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து, மோசடியில் ஈடுபட்ட நெல் கொள்வனவாளர்கள் மற்றும் முறைகேடான தராசு ஆகியவை திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, திருக்கோவில் பொலிஸாரால் தராசின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும், வழக்குத் தாக்கலும் செய்யப்பட்டுள்ளன.
பொதுமக்களுக்கு தவிசாளர் விடுக்கும்.
இச்சம்பவம் குறித்து திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் தெரிவிக்கையில்:
"எமது பிரதேசத்தில் இதுபோன்ற கண்டறியப்படாத மோசடிகள் பல நடந்திருக்கக்கூடும். ஆனால், இனிவரும் காலங்களில் இத்தகைய சட்டவிரோத மோசடிகள் முற்றிலும் நடைபெறாத வண்ணம் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
விவசாயிகளாகிய நீங்கள் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். நெல் நிறுவை மற்றும் இதர வியாபாரங்களில் இதுபோன்ற மோசடிகள் நடப்பதை அவதானித்தால், தயங்காமல் உடனடியாக திருக்கோவில் பிரதேச சபையைத் தொடர்பு கொள்ளுங்கள்.
தொடர்பு எண்: 067 2265018