நாட்டின் மத்திய, சப்ரகமுவா, தென் மற்றும் மேல் மாகாணங்களில் இன்று (03.08.2026)மாலை மற்றும் இரவு வேளைகளில் தொடர்ச்சியாக மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளதுடன், நாளையும் (04.08.2026) இந்த கனமழை தொடரும் என வானிலை ஆய்வாளர் நாகமுத்து பிரதீபராஜா அறிவித்துள்ளார்.
தொடர் மழையின் காரணமாக மகாவலி, களுகங்கை, களனிகங்கை உள்ளிட்ட பல பிரதான ஆறுகள் பல இடங்களில் வெள்ள மட்டத்தை அடைந்து பெருக்கெடுத்துள்ளன.
இதனால், ஆற்றங்கரையோரங்கள், நீர்த்தேக்கங்களின் மேலதிக நீர் வெளியேறும் பகுதிகள் மற்றும் தாழ்நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக அந்த இடங்களை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, நுவரெலியா, கண்டி, கேகாலை, மாத்தளை மற்றும் குருநாகல் மாவட்டங்களின் சில பகுதிகள் நிலச்சரிவுக்கான ஆபத்தான சூழ்நிலையைக் கொண்டுள்ளன.
எனவே, இரவு வரை காத்திருக்காமல் பகல் பொழுதிலேயே பாதுகாப்பான வழிகளினூடாக நிலச்சரிவு அபாயமுள்ள பகுதிகளை விட்டு வெளியேறுவது மிகவும் சிறந்தது என பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.